பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

மருத்துவ விஞ்ஞானிகள்


சேக்ஷ்பியர் நாடகங்களது கெய்டு இருப்பதை பார்த்த அந்த போராசிரியர், அந்த வழிகாட்டி நூலைப் படித்துவிட்டு, அற்புதமான ஆங்கில மொழியின் அந்த விரிவுரையைக் கண்டு பாராட்டினார்! தனக்குள்ள சந்தேகம் அப் பாடங்களில் ஏற்பட்ட போது, அந்த நோட்சைப் புரட்டிப் பார்த்து பாடம் போதித்தார்!

இதில் என்ன சிறப்பு என்றால், சேக்ஸ்பியர் நாடகக் கெய்டின் ஆசிரியர் யார் தெரியுமா ‘மேக்னிலான் ரூப்’ என்று பெயர் அச்சிடப்பட்டிருந்தது. யார் இந்த மேக்னிலான் ரூப் என்ற விசாரணை வகுப்பில் நடந்தது. மாணவர்கள் யாரும் அந்த பெயர் யாருடையது என்ற உண்மையைக் கூறவில்லை. அவர் யார் என்ற அடையாளமும் தெரியவில்லை. நோட்சிலுள்ள ஆங்கில மொழிப் புலமை நயத்துக்காக மாணவர்கள் அதைப் பணம் கொடுத்து வாங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள்.

இறுதியாக, விசாரணை அப்போதிருந்த லையோலா கல்லூரி பிரின்ஸ்பால் மில்லர் வரை சென்ற பின்பு உண்மை தெரிந்தது. அதாவது, எம்.எஸ். பூரணலிங்கம் என்ற எஃப்.ஏ. மாணவர் அந்த நோட்சை எழுதி அச்சிட்டு, அவரே அந்த வகுப்பு மாணவர்கட் கெல்லாம் அதை விற்று, பிறகு அவரே அந்த கெய்டை விரித்து வைத்துக் கொண்டு, பேராசிரியர் நடத்துவதையும் கவனித்தபடியே அமர்ந்திருந்தார்.

பிரின்ஸ்பால் மில்லர், எஃப்.ஏ. வகுப்புக்கு வந்து, யார் இந்த மேக்னிலான் ரூப் என்று கேட்டார்? அதற்கு கெய்டு எழுதிய மாணவர் எழுந்து ‘நான் தான்’ என்றார்!

உனது பெயர் எம்.எஸ். பூரணலிங்கம் அல்லவா? என்று பிரின்ஸ்பால் கேட்க, அதற்கு கெய்டு ஆசிரியர் ‘ஆம்’ என்றுரைக்க, பிறகு எப்படி ஆள் மாறாட்டப் பெயரிலே நோட்சை அச்சிடலாம் என்று பிரின்ஸ்பால் கேட்க, அதற்கு நோட்ஸ் ஆசிரியர் எனது பெயர் POORNALINGAM என்றிருப்பதை, தலை கீழாக எழுதினால் “MAGNILAN ROOP” என்று வரும். அந்த பெயர்தான் இது என்று எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை கூறினார்!