பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

மருத்துவ விஞ்ஞானிகள்


உறங்க நேரமில்லை. அவ்வளவு கல்விப் பணிகள் அவருக்கு வந்து சேர்ந்தன.

லூயி பாஸ்டியர், பல்கலைக் கழகம் செல்வார். அங்கு அறிஞர்கள் ஆற்றும் அறிவியலுரைகளைக் கேட்பார்; குறிப் பெடுப்பார்; அவற்றை மீண்டும் மீண்டும் படித்துக் கவனத்தில் நிறுத்துவார்.

லூயியின் கல்விப் பொறுப்புணர்ச்சிகளைப் பார்பட் தொடர்ந்து கவனித்துக் கொண்ட வந்தார். அதனால் அவரை அழைத்து - பார்பட், ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். அதாவது, தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு ட்யூஷன் எடுக்கும் பணியை, அதாவது ஓய்வு நேரத்தில் பாடம் நடத்தும் பொறுப்பை அவர் லூயிடமே ஒப்படைத்தார்.

இதைக் கண்ட லூயி, ஆர்பாய் தலைமையாசிரியரைப் போல, பெசன்கான் தலைமை ஆசிரியரான பார்பட்டும் ஓர் ஒப்பற்ற பணியைத் தன்னிடம் ஒப்படைத் திருப்பதைக் கண்டு பேருவகைப் பெற்று, அவரை நேரில் கண்டு நன்றி கூறினார்.

பென்சான்கான் பள்ளிக் கல்வித்துறை, லூயிக்குரிய ஊதியமாக, அவர் பள்ளிக்கு மாதந்தோறும் கட்டம் சம்பளப் பணத்தில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்துக் கட்டுமாறு தலைமையாசிரியர் உத்தரவிட்டார்.

பார்பட் செய்த உதவியும், பள்ளி நிருவாகம் செய்த உதவியையும் கண்டு லூயி உவகையடைந்தார். இதனால், தமது ஏழைப் பெற்றோரது கல்விக்குரிய செலவினச் சுமை ஓரளவுக் குறைந்ததைக் கண்டு மகிழ்ச்சி பெற்றாலும், அதே நேரத்தில் அவர் தனது கல்வியில் மேலும் ஊக்கம் செலுத்தினார்.

தன்னுடன் கல்வி கற்கும் சக மாணவர்களுக்குரிய பாடப் பயிற்சியை மேலும் ஊக்கப்படுத்தினார். உழைப்பு உயர்வினைத் தருமல்லவா? அதற்கேற்ப லூயியின் ஓய்வில்லா உழைப்பைக் கண்டு பள்ளி நிருவாகம் மன நிறைவு பெற்று, லூயி தனது கல்விக்கான சம்பளத்தை அறவே கட்ட வேண்டாம் என்று கூறிவிட்டது.