உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

மருத்துவ விஞ்ஞானிகள்


மரீக்கு மனமில்லை. லூயிக்கும் விழாவுக்குப் போகும் எண்ணம் எழாமல் மெய் மறந்து உட்கார்ந்து விட்டார்.

விழாவுக்குச் செல்லும் அலங்காரத்தோடே மரீ இருந்து விட்டார். லூயியும் விழாவை மறந்து விட்டார். விழா முடிந்த பிறகு லூயி எழுந்து வந்தார். என்ன பயன் அதனால்? மரீயும் முகம் சுளிக்கவில்லை; லூயியும் மறந்துவிட்டோமே என்று வருந்தவும் இல்லை! இருவரும் ஊமைகளாகவே இருந்து விட்டார்கள். மரீக்கு விழாவைவிட மணாளனது ஆய்வுதான் பெரிதாகத் தெரிந்தது. அத்தகைய மாதரசி மரீ!

தனது கணவர் தொடர்ந்து விஞ்ஞான சோதனைகளைச் செய்ய வேண்டும் அதனால் புதுப்புது கண்டுபிடிப்புகளை உலகு பெற வேண்டும்: பேரும் புகழும் லூயியைத் தேடி வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் மரீ.

சோதனைக் கூடமே கதி என்று கருதி, உடல் நலன்களை லூயி உதாசினப்படுத்த விடமாட்டார். லூயியின் உடல் நலம் ஏதாவது கெடும்போல் தெரிந்தால், உடனே அதற்கு முன் நடவடிக்கையாக கணவனது உடல் நலம் வளம் பெறுவதற்கான சத்துணவுகளை எல்லாம் மரீ தயார் செய்து கொடுப்பார்; கணவனது உடல்தான் அந்த அம்மையாருக்கு தேவாலயம்; அவ்வளவு பயபக்தியோடு அந்த ஆலயக் காவலராக விளங்கியவர் மரீ!

இத்தகைய ஒர் அருமையான இல்லத்தரசியை லூயி பெற்றதால், அவருக்கு ஆய்வுப் பணிகளுக்கான உதவிகள் எளிதாகக் கிடைத்தன. அதனால்தான் அவரால் தொடர்ந்து அமர்ந்து ஆய்வுப் பணிகளை ஆற்ற முடிந்தது.

ஒரு முறை லூயி பாஸ்டியர் அமிலத்தைப் பற்றி ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். ‘டார் டாரிக்’ என்பது ஓர் அமிலம். அந்த அமிலத்தில் இருந்து ‘ரேசமிக்’ அமிலம் என்ற ஒர் அமிலத்தை எப்படித் தயார் செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் கடுமையாக ஈடுபட்டார். இறுதியில் அவரது ஆய்வு வெற்றி பெற்றுவிட்டது.