பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

157



லூயி பாஸ்டியர் அன்று அறிவித்த அந்தக் கருத்தை ஃபிரான்ஸ் நாடு ஏற்கவில்லை. ஆனால், மற்ற நாடுகளிலே உள்ள அறிஞர்களிலே பலர் ஏற்றுக்கொண்டு, அவர் கூறிய யோசனையின்படி மருத்துவத்தைச் செய்து வந்தார்கள்.

லூயி பாஸ்டியர் கூறிய கருத்தில் எப்போதும் உண்மை இருக்கும் என்று நம்பிய ஒரு மருத்துவர், அவர் கூறியதை ஊசி முனையளவு கூடத் தவறாமல் சிகிச்சை செய்து வந்தார். என்ன அந்த சிகிச்சை என்கிறீர்களா? இதோ அந்த சிகிச்சை முறை:

ஒரு நோயாளி காலில் காயம்பட்டு வந்தார். அவர் காயத்தை அந்த மருத்துவர் கார்போலிக் அமிலத்தால் கழுவிச் சுத்தம் செய்தார். அதன் மேல் பஞ்சு வைத்துக் கட்டுக் கட்டினார் அந்த மருத்துவர் அவ்வாறு செய்ததால், காயத்திலே உள்ள நோய்க் கிருமிகள் எல்லாம் செத்தன. செத்தது மட்டுமல்ல; அக் கிருமிகள் வேறோர் இடத்துக்குத் தொடர்ந்து சென்று நோயைப் பரவாமல் தடுக்கப்பட்டன. காயமும் சீக்கிரமாக ஆறிவிட்டது. நோயாளி சுகமாக வீடுசென்றார்.

இதுதான் அந்த மருத்துவர் கையாண்ட லூயி பாஸ்டியர் சிகிச்சை முறை; இதே முறையைக் கையாண்டே அந்த மருத்துவர் பல நோயாளிகளைக் காப்பாற்றினார்.

அந்த மருத்துவர், தான் கையாண்டு வெற்றி பெற்ற பாஸ்டியர் சிகிச்சை முறை வெற்றியை, லூயி பாஸ்டியருக்கே எழுதி, தங்களது முறை எனது நோயாளிகளுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

அக் கடிதத்தைப் படித்த லூயி பாஸ்டியர், தனது கருத்து உண்மையானது சரியானது என்று நிரூபிக்க அந்த மருத்துவர் எழுதிய கடிதமே தனக்குச் சான்றாக இருந்தது என்பதைக் கண்டு மகிழ்ந்தார். அதற்கு அடுத்து எடின்பர்க் நகரைச் சேர்ந்த லிஸ்டர் என்ற ஒரு மருத்துவர், லூயி பாஸ்டியர் கருத்துக்களை நம்பி, அவரது சிகிச்சை முறையைப் பின்பற்றி, நோயாளிகளின் காயங்களை கார்போலிக் அமிலத்தால் சுத்தம் செய்து கழுவினார். மருந்தும் வைத்துக் கட்டினார்.