பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

மருத்துவ விஞ்ஞானிகள்



காயங்களில் காற்றுப் புகாதபடியும், கிருமிகள் வேறோரி டத்தில் பரவாமலும் தடுத்தார். அந்த சிகிச்சை முறையில் லிஸ்டர் வெற்றி பெற்றார். வெற்றிபெற்ற லிஸ்டர் தனது சிகிச்சை முறையைப் பற்றி கட்டுரை ஒன்று எழுதினார். அந்தக் கட்டுரையில் தனது மருத்துவ வெற்றிக்குக் காரணம், தான் கண்டுபிடித்த சிகிச்சைமுறைதான் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு அயல் நாட்டு மருத்துவர் பலர் அறிக்கை விடுத்தும், அஞ்சல் மூலமாகவும், கட்டுரை வாயிலாகவும் சான்றளித்த பிறகும் கூட, ஃபிரான்ஸ் அறிஞர்கள் பாஸ்டியர் ஆய்வுக் கருத்தின் முடிவை நம்பவில்லை. இவை அனைத்தையும் கண்ட பிறகு லூயி மனம் இரும்பானது. என்றாவது ஒரு நாள் ஃபிரான்சின் தெளிவில்லா நெஞ்சம் தெளியும் என்ற மனோ பலத்தோடு இருந்தார்.

இடைவிடாத ஆராய்ச்சிகள் ஓர் புறம், எதிர்வாதமிடு வோருக்கு பதில்கள் அளிப்பது இன்னோர் புறம்; சோர்விலாமல் நிரூபணக் கருவிகளைச் சுமந்து கொண்டோடும் அலைச்சல்கள் மற்றோர் புறம் என்று - இவ்வாறு அவர் சுற்றிச் சுற்றியதால் - லூயி பாஸ்டியர் உடல் நிலை உருக்குலை அடைந்தது.

சார்போன் பல்கலைக் கழகத்தின் இரசாயனப் பேராசிரியர் பணியிலே இருந்து லூயி விலகிவிட்டார். அதைக் கண்ட பிரெஞ்சு அரசு அவருக்குரிய சேவைகளுக்காக உதவித் தொகை உதவ முன் வந்தது.

லூயி பாஸ்டியர் உயிரோடு இருக்கும் வரை அவர் பெற்றிருந்த முழுச் சம்பளத்தையே, அவர் விலகிய பிறகும் வழங்கியது. லூயி மறைந்த பிறகு அவருடைய மனைவிக்கு; லூயி பெற்றதில் பாதி தொகையை வழங்கத் தீர்மானித்த அரசு முடிவை ஃபிரான்ஸ் மக்கள் அனைவரும் ஒரு மனதுடன் வரவேற்றார்கள்!

பிரெஞ்சு அரசு முடிவுக்குப் பிறகாவது, அல்லது - சார்போன் பல்கலைக் கழகப் பதவியை விட்டு விலகி விட்ட பிறகாவது, லூயி பாஸ்டியர் விஞ்ஞானத் துறை ஆய்வை விட்டு விலகிக் கொண்டாரா - என்றால் இல்லை.