பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

மருத்துவ விஞ்ஞானிகள்



சில பணக்காரர்கள் ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற அறிவிப்புப் பலகையை அவரவர் வீடுகளிலே தொங்க விட்டுக் கொள் கிறார்கள். நாய்க்கு உண்டாகும் வெறி நோயை ரேபியீஸ் (Rabies) என்று குறிப்பிடுவார்கள். வெறிநாய் மனிதனைக் கடிக்கும்போது அவனுக்கு வெறிநோய் போன்ற ஒருவகை நோய் உண்டாகிறது. அந்த நோய்க்கு நீர்ப் பைத்தியம்; நீர் வெறுப்பு நோய் என்றும் பெயர்.

ஆங்கிலத்தில் அந்த நோயை Hydrophobia என்பார்கள். இதனை Fear of Water என்றும், அதாவது தண்ணீரைக் கண்டால் பயப்படும் படியான வியாதி, அதாவது ஜலபீதி என்பார்கள்.

இந்த நோயை நீர்ப் பைத்தியம் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

நாய் கடித்து, அந்த நோய் கண்டவருக்கு அடிக்கடி தண்ணீர்த் தாகம் உண்டாகும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அவர்களால் ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்க முடியாமல் நீர்கிலி, ஜலபீதி ஏற்பட்டு, தண்ணீரைப் பார்த்தாலே பயந்து ஒடுவார்கள். இதன் முடிவு என்ன தெரியுமா? சாவு! மரணம்! இறப்பு! தான்!

லூயி பாஸ்டியர் வாழ்ந்த காலத்தில் வெறி நாய் கடியால் உண்டான ‘நீர்ப் பைத்தியம்’ என்ற நோய்க்கு மருந்தே இல்லை. இல்லை என்பதை விட கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதுதான் உண்மை. நாய் கடித்த இடத்தில், பழுக்கக் காய்ச்சிய, இரும்பால் சுடுவார்கள். நாய் கடிப்பட்டவன் அலறுவான்; கதறுவான்; பதறிப் பதறி பதைப்பான். பாவம்! இவைதான் அக்கால நாய்க் கடிக்கு வைத்தியம்.

இந்த கொதிக்கும் கனல் இரும்புச் சிகிச்சைக்குத் தப்பிப் பிழைத்து மீண்டு வந்தால் வாழ்க்கை உண்டு! இல்லையானால் சுடுகாடுதான்! வேறு மருந்தேதுமே இல்லை.

வெறி நாய்க் கடி வேதனை ஒருபுறம், பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சூடு இன்னொரு புறம். இந்த இரண்டு கொடுர வேதனைகளிலே எண்ணற்றோர் ஒவ்வொரு நாட்டிலும் மரணமடைந்து வந்தார்கள்.