பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

15


மன்னன் மறுநாள் திருநின்றவூர் சென்று கனவில் கூறப்பட்டக் கோவிலைத் தேடினான். எங்கும் காணப்படவில்லை ஆலயம். அப்போது பூசலார் நாயினார் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருப்பதைக் கண்ட பல்லவ வேந்தன், அவரை அணுகி கோவில் கும்பாபிஷேகம் குறித்து விசாரித்தான்.

அப்போது பூசலார் இடது கையைத் தனது இதயத்தில் வைத்துக் காட்டி, “நான் எழுப்பிய இறைக் கோட்டம் இதுதான்” என்றார். நாயனாரின் அந்த இதயப் பாகத்துள் இறைவன் திருத்தலம் காட்சி அளித்ததை பல்லவன் பார்த்தான். அதாவது, நாயனார் இதயமே மன்னனுக்குக் கோவிலாகத் தெரிந்தது.

உடனே பல்லவ வேந்தன், அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாரும் வியக்கத் தக்க நிலையில் ஒரு பெரிய திருக்கோவிலை எழுப்பினான். அவர்தான் இருதயாலேஸ்வரர் என்ற இறைவன் ஆவார்.

இவ்வாறாக, காலம் காலமாக இதயத்தின் பெருமைகளைக் கூறப்பட்டு வந்ததின் காரணமாக - மருத்துவ விஞ்ஞானிகளும், இதயம் பற்றி ஆராய்ச்சி செய்யவே அஞ்சி இருக்கிறார்கள்.

உடலின் எந்தப் பாகத்தையும் ஆராய்ச்சி செய்யலாம்; ஆனால், இதயத்தைப் பற்றி மட்டும் யாரும் தொட வேண்டாம் என்று சென்ற நூற்றாண்டு வரை சிலர் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், தியோடர் பில்ராத் என்ற மருத்துவ விஞ்ஞானி இதயத்தின் காயத்தை எவன் தைக்கிறானோ, அவன் தனது மருத்துவ இனத்தின் மரியாதையை இழப்பான் என்று கூறி பயமுறுத்தி விட்டதால், எவரும் இதய பாகத்தை ஆராய்ச்சி செய்வதையே கைவிட்டு விட்டார்கள்.

ஹிப்போ கிரேட்டஸ்; இதய ஆய்வு!

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஹிப்போ கிரேட்டஸ் என்ற மருத்துவமேதை கூட, இதயத்தை ஒரு மர்மப் பாகமாகவே கருதி, இதயத்தை வெறும் காற்றுக் குழாய் என்றே நினைத்து விட்டார்.