பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

மருத்துவ விஞ்ஞானிகள்


அறிவியல் ஆராய்ச்சில் ஈடுபட்டார். சில புதிய உண்மைகளைக் கண்டு பிடித்தார். அவற்றை உலகுக்கு அவர் அறிவித்தபோது பலர் பாராட்டினார்கள்.

வேறு சிலர், மூடநம்பிக்கை உணர்வுகளால் எதிர்த்தார்கள். இருந்தாலும், அவைகளைத் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்கு லூயி உரமாக்கிக் கொண்டாரே ஒழிய - மனச்சோர்வோ, இலட்சிய தளர்வுகளோ பெற்றாரில்லை.

எதிர்ப்புகளும், தோல்விகளும்தான் ஓர் இலட்சிய வெற்றிக்குரிய படிக் கற்கள் என்பதை உணர்ந்து லூயி பாஸ்டியர் தனது ஆய்வுக் கடமைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.

ஃபிரான்ஸ் நாட்டின் பீர் தொழில், ஒயின் தொழில், பட்டுத் தொழில், கால் நடைகளது நோய், ரேபீயஸ் என்ற நாய்க்கடி நீர்ப் பைத்திய நோய் ஆகியவற்றுக்கு அவர் செய்த கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு மிகப் பெரிய அரிய பணிகளை அவர் செய்து வெற்றியும் பெற்றவர் ஆவார்.

மேற்கூறிய கண்டுபிடிப்புக்களை அவர்தான் உலகில் முதன் முதலாகக் கண்டு பிடித்தார். அவற்றைக் கொண்டு வணிகம் செய்து பணம் சம்பாதிக்கும் கோடீஸ்வரர் ஆனாரா? அதுதான் இல்லை. ஏழையாகப் பிறந்த அவர் எழையாகவே மறைந்தார்.

அவரது கண்டு பிடிப்புகளால் உலக மக்கள்தான் நோய்களிலே இருந்து மீண்டார்களே தவிர, லூயி பாஸ்டியர் எந்த வித வாழ்வியல் ஏற்றமும் பெற்றவரல்லர்!

காரணம், பணம் சம்பாதிப்பதன்று அவரது நோக்கம். மனித இனத்திற்கும் மற்ற உயிரினங்களுக்கும் உதவி செய்வதையே குறிக்கோளாகப் பெற்றிருந்தார். அதாவது உலக உயிரினங்களின் நோய்களை அழிப்பதையே, அந்த நோய்களை உருவாக்கும் கிருமி இனங்களை அழித்து ஒழிப்பதையே இலட்சியமாக எண்ணினார்.