பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மருத்துவ விஞ்ஞானிகள்


உணவை, ரத்தத்தை கொடுக்கிறது. இவற்றை சற்று விரிவாக உணர்ந்தால், இதயம் தான் நாம் செய்யும் எல்லாப் பணிகளுக்கும் முதல் பொருளாக அமைந்துள்ளது. இரத்தச் சுழற்சியே ஒரு மர்மக் கதை போல இருப்பதை நம்மால் உணர முடியும் என்பதையும் ஹார்விதான் நமக்குப் புலப்படுத்தினார் என்பதே உண்மை ஆகும்.

இப்படிப்பட்ட ஒரு மர்மத்தை எவருக்கும் அதுவரை புரியாத ஓர் எண்ணத்தை, தனது ஆராய்ச்சி மூலமாக மற்றவர் களுக்கு எடுத்துக் கூறியதால் அவர் பெற்ற பட்டம் என்ன தெரியுமா?

ஹார்வி ஒரு கிறுக்கன்; அரைப் பைத்தியம் பிடித்தவன்; இல்லாததை இருப்பதாகக் கூறும் ஒரு பொய்யன், விஞ்ஞானப் புரட்டன் என்றெல்லாம் ஹார்வியைக் கண்டனம் செய்தவர்கள் கணக்கற்றப் பேர்கள் ஆவர்.

இந்தப் பட்டங்களை ஹார்வி சுமந்தாலும், தனது கண்டு பிடிப்பு முழு உண்மை உணர்வுகளை வெளியே கூறலாமா? வேண்டாமா? என்று யோசித்தார். இருந்தாலும், உலகம் உய்ய வேண்டுமே என்ற மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அவர் தனது கருத்துக்களைத் துணிந்து வெளியிட்டார் !

அவர் மகா துணிச்சல்காரர் என்பதை, செர்விட்டசைக் கயவர்கள் உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் தெரிந்தும் கூட, இதயம் பற்றிய ஆராய்ச்சியில் அவர் இறங்கி அறிவாழம் கண்டவராயிற்றே அவரா எதற்கும் அஞ்சுவார்?

ஆனாலும், அவர் அச்சப்பட்டதற்கேற்பவே, அழுக்காறு நெஞ்சங்களும், அறியாமை உள்ளங்களும் அவரைப் பலமாகத் தான் எதிர்த்தன ஏளனம் செய்தன: ஏகடியம் பேசின.

வில்லியம் ஹார்வி தனது ஆராய்ச்சியில் ஒரே ஒரு ரகிசயம் மட்டும் புரியாமல் திணறினார் என்ன அந்த ரகசியம்?

இதயத்திலே இருந்து தமனி வழியாகப் பயணம் செய்யும் இரத்தம், திரும்பி வரும் வழியில் எப்படி சிரைக்குச் சென்று மீண்டும் இதயத்திற்கு வருகிறது? என்பதுதான் அந்த இரகசியம்.