பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மருத்துவ விஞ்ஞானிகள்



சார்லஸ் எடின்பர்கில் முடி சூட்டிக் கொள்ளும் விழா நடைபெற்ற போது, வில்லியம் ஹார்விதான் உடனிருந்து எல்லா வேலைகளையும் அரண்மனையில் செய்தார்.

இங்கிலாந்து நாட்டில் அப்போது சூனியக்காரிகள் அதிகமாக நடமாடி வந்தார்கள். அவர்கள் மந்திர வித்தைகளால் மக்களுக்கு வரும் நோயைக் குணப்படுத்துகிறார்கள் என்ற பிரச்சாரம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டிருந்தது.

மன்னன் சார்லஸ் சூனியக்காரிகள் செயல் உண்மையானது தானா என்று ஆராய்ச்சி செய்யுமாறு ஹார்வியை கேட்டுக் கொண்டார்.

ஹார்வி மன்னனது வாக்கை ஏற்று சூனியக்காரிகளின் மந்திர வித்தைகளைப் பரிசோதனை செய்து, மந்திரம் எல்லாம் வயிற்றுப் பிழைப்பிற்கான தந்திரங்கள் என்று கூறி, அவர்களை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டதற்கேற்ப, மன்னர் அவர்களை மன்னித்து விட்டார்.

இங்கிலாந்து நாட்டில் கி.பி. 1642-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்று கொண்டிருந்தது. மன்னர் சார்லசும் வில்லியம் ஹார்வியும் இணை பிரியா நண்பர்கள் அல்லவா?

அதனால் மன்னருடனேயே ஹார்வி தங்கியிருந்து தக்க உதவியாளராக செயல்பட்டார். மன்னனுக்குரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வந்தார்.

உள் நாட்டு புரட்சியாளர்களுக்கு இந்த விவரம் தெரிந்தது. அதனால், ஹார்வியையும் அவர்கள் எதிரிகளாக நினைத்தார்கள். வில்லியம் ஹார்வி வீட்டுக்குள் புரட்சிக்காரர்கள் புகுந்து விட்டார்கள். அவருடைய நூற்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அவர் எழுதி வைத்திருந்த மருத்துவக் குறிப்புகள் எல்லாமே சாம்பலாகி விட்டன.

புரட்சிகாரர்கள் செய்தக் கொடுமைகளை எல்லாம் வில்லியம் ஹார்வி மன்னனுக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார்.