பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

37




நான் அரும்பாடுபட்டு ஆராய்ச்சி செய்து வைத்திருந்த எல்லாக் குறிப்புகளையும் தீயிற்கு இரையாக்கி விட்டார்களே என்று மன வேதனையோடு தெரிவித்தார் ஹார்வி.

சார்லஸ் மன்னன் வில்லியம் ஹார்விக்கு ஆறுதல் கூறினார். தனது மகன்கள் இருவரையும் ஹார்வியிடமே பாதுகாப்புக்காக ஒப்படைத்தார்.

வில்லியம் ஹார்வி மீண்டும் தனது ஆராய்ச்சியைச் செய்ய முடியாதபடி, புரட்சிக்கார்கள் அவருடைய குறிப்புக்களை கொளுத்தி விட்டதால் மனமுடைந்த ஹார்வி, தனது ஆராய்ச்சிப் பணிகளை நிறுத்தி விட்டார். அதனால் மனம் தளர்ந்தார்.

உலகத்துக்கு ‘இதயம்’ என்ற உடற் கூறு ஆராய்ச்சியை வழங்கிய வில்லியம் ஹார்வி; 1659-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலமானார்.

ஏப்ரல் ஃபூல் தினமான 1.4.1578ஆம் ஆண்டு பிறந்த வில்லியம் ஹார்வி, ஏறக்குறைய 79 ஆண்டுகள் வாழ்ந்து மருத்துவ விஞ்ஞான மேதையாகப் புகழ் பெற்றார்.

இலண்டன் இராயல் மருத்துவக் கல்லூரி, அவரை அந்த மருத்துவக் கல்லூரிக்குத் தலைவராகத் தேர்வு செய்தபோது, தலைவர் பதவியை வேண்டாம் என்று அவர் மறுத்து விட்டார்.

மனித இனத்தை உய்வித்திட, மருத்துவத் துறை மறுமலர்ச்சிக்காக, இதயம், இரத்த ஓட்டம் என்ற தலை சிறந்த ஆராய்ச்சிகளை நடத்தி, அதன் நன்மைகளை உலகுக்குக் கொடையாகக் கொடுத்த மருத்துவத் துறையின் இதயக் கோமான் வில்லியம் ஹார்வி மறைந்ததைக் கண்டு இலண்டன் நகரமும், ஏன் உலகமே கண்ணீர் சிந்தியது.

ஆனால், இன்று வில்லியம் ஹார்விக்கு Father of Cardiology என்ற விருதுவை உலக மருத்துவ உலகம் வழங்கி, இதயத் துறையின் தந்தை என்றே போற்றியதுடன், அவருக்குத் தனது நன்றியைக் கூறிக் கொண்டு வாழ்ந்து வருகின்றது.