உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





சர். வில்லியம் ஆஸ்லர்!
(1849 - 1919)



3

இராபர்ட் கிளைவ் போன்ற குறும்பர் -
உலகம் கண்ணீர் விடும் மருத்துவரானார்!

வட அமெரிக்காவில், கனடா நாட்டின் மேல் பகுதியில் டன்டாஸ் என்றோர் நகர் இருக்கிறது. அந்த நகரில் காமன் பள்ளி, கிராமர் பள்ளி என்ற இரண்டு பள்ளிக் கூடங்கள் இருந்தன. இதில் என்ன சிறப்பு என்றால், மேற்கண்ட இரு பள்ளிகளும் ஒரே கட்டிடத்தில் நடைபெற்று வந்தன என்பதுதான்.

இரண்டு பள்ளிக் கூடங்கள் ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்தால், அவை சுமூகமாகவோ, அமைதியாகவோ, பிரச்னைகள் அற்ற நிலையிலோ இயங்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்?

இந்த இரு பள்ளி மாணவர்கள் இடையே எப்போது பார்த்தாலும் ஒரே தகராறுகள் எழுந்தபடியே இருக்கும்! ஆசிரியர்கள் இடையே அடிக்கடி என்ன காரணத்தாலோ மோதல்கள் தோன்றிக் கொண்டே இருந்தன.

காமன் பள்ளி ஆசிரியர்களுக்கு, கிராமர் பள்ளி மாணவர்களைக் கண்டால் கசப்பாக இருக்கும், கிராமர் பள்ளி மாணவர்கள் காமன் பள்ளி ஆசிரியர்களைக் கண்டால் வேம்புக் குச்சியாகவே கருதுவார்கள்!