காய்ச்சலை ஒழித்திடும் மருத்துவ முறையைக் கண்டுபிடித்தவர் டாக்டர் சர். ரொனால்டு ரோஸ். அவரது மருத்துவ வரலாறும் இந்த நூலில் உள்ளது.
எல்லாவற்றுக்கும் சிகரமாக, ரேபியீஸ் என்ற வெறி நாய் கடிக்கு அந்த வெறிநாயின் மூளையே மருந்து என்று கண்டுபிடித்த மருத்துவ மேதையின் மருத்துவ வரலாறும். ஆடு, மாடு, கோழி, பன்றிகளுக்கு வரும் ஆந்தராக்ஸ் என்ற கொடிய நோயை ஒழித்து, விவசாயப் பெருமக்களது தோழனாக விளங்கியவரும், பட்டுப் பூச்சிகளது நோயை ஒழிக்க மருத்துவம் கண்டுபிடித்து, பட்டு உற்பத்தி தொழிலாளர்களை வாழ வைத்தவரும், இன்றைய குளிர்பதனக் குடி பானங்களைப் பாட்டிலில் அடைத்த பிறகு, அதை கெடாமல் நீண்ட நாள் இருக்க, அவற்றைப் பருகி மக்கள் ஆரோக்கியமான உடல் வளத்துடனும் - நலத்துடனும் உயிர் வாழ, அறிவியல் சாதனம் கண்டுபிடித்து உதவியவருமான “லூயி பாஸ்டியரின்” சாதனைகளும் - அவரது வரலாறும் அடங்கிய நூல் இந்த ‘மருத்துவ விஞ்ஞானிகள்” என்ற நூல்.
அந்த மேதைகளின் விடா முயற்சிகளால் விளைந்த கண்டு பிடிப்புகளைக் கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அதனால் அந்த மருத்துவ வித்தகர்களது வரலாற்றை, ஆங்கில நூல்களது ஆய்வின் துணை கொண்டு தமிழில் வழங்கியுள்ளார் இந்த நூலாசிரியர்.
இந்த நூல் விஞ்ஞானம் படிக்கும் உயர்நிலை, மேநிலைக் கல்வி மாணவர்களுக்குப் பெரிதும் உறுதுணையாக விளங்கும் என்ற எண்ணத்தில், அன்னை பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.
எனவே, அறிவியல் துறை மாணவர்களும், வரலாறுகள் படித்து மகிழும் தமிழ் மக்களும் - ஆதரவு காட்டுமாறு வேண்டுகின்றோம்.
அன்புடன்
வா. அறிஞர் அண்ணா