64
மருத்துவ விஞ்ஞானிகள்
அதற்கேற்ப அவனது ஆராய்ச்சிப் பணிகளும் விளங்கின. எனவே, விஞ்ஞான ஆராய்ச்சி முறைகளில் அவன் தேர்ச்சி பெற்று வந்தான்.
அந்தக் கல்லூரிக்கு ஒரு புதிய பெண் வார்டனை நியமித்தது கல்லூரி நிர்வாகம். அவள் மாணவர்களை அடக்கி ஆள்வதில் திறமையானவள். அதனால் மாணவர்களுக்குப் பெண் வார்டன் போக்குப் பிடிக்கவில்லை. காரணம், அவள் சிறு தவறுகளை மாணவர்களிடம் கண்டுவிட்டால்கூட, உடனே பெரிய தண்டனைகளை வழங்கும் சுபாவமுடையவளாக இருந்தாள். அதனால் அந்தப் பெண் வார்டனுக்குத் தக்கப் பாடம் கற்பிக்க மாணவர்கள் திட்டமிட்டார்கள்.
அந்தத் திட்டத்தை மற்ற மாணவர்கள் ஆஸ்லரிடம் ஒப்படைத்தார்கள். இவருக்கும் சில நாட்கள் குறும்புகளைச் செய்யாமல் இருந்த போக்கு, என்னமோ போல இருந்தது. அதனால் வார்டனுக்குப் பாடம் கற்பிக்கும் திட்டத்தை ஆஸ்லர் ஏற்றுக் கொண்டார்.
மாணவர்களின் சிலரை அழைத்துப் புகையிலை, மிளகு முதலிய பொருட்களை கொண்டு வரச் சொன்னார் ஆஸ்லர். அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டார். கொஞ்சம் நெருப்புத் துண்டங்களைப் பாத்திரத்திலிட்டு ஊதினார். பெரிய வார்டனான ஜான்சன் மகன்களையும் உதவிக்கு அழைத்துக் கொண்டார்.
அவர்கள் உதவியால் பெண் வார்டரை ஓர் அறையில் தள்ளிப் பூட்டி விட்டார். ஏற்கனவே தயாரக வைத்திருந்த நெடி கிளப்பும் புகையிலைப் புகையை, பூட்டப்பட்ட அறையிலுள்ள ஒரு துவாரம் வழியாக ஆஸ்லர் செலுத்தினார். புகை அறைக்குள் வட்ட மிட்டது. மேலும் மேலும் அந்தப் புகையை அறைக்குள் அடர்த்தி யாகப் போக வைத்தனர் ஆஸ்லரும் - அவரது மாணவ நண்பர்களும்.