உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தப் பெண் வார்டன் புகை வந்த துவாரத்தை ஒரு துணியால் அடைத்துப் புகை அறைக்குள் வராதவாறு தடுத்தார். உடனே மாணவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் துவராத்தைக் குத்திக் குத்தி அடைக்கப்பட்ட துணியைக் கீழே தள்ளி விட்டார்கள். ஆனால், புகை அறைக்குள் ஏராளமாகப் புகுந்து விட்டது. அந்தப் பெண் மூச்சு திணறலுக்குள் சிக்கிப் பெரிதும் துன்பப்பட்டாள்.

திக்கு முக்காடிய அந்தப் பெண் இருமி இருமி, குய்யோ முறையோ என்று ஓலமிட்டுத் தன்னைக் காப்பாற்றும்படிக் கூச்சலிட்டாள்.

பெண் வார்டனது கூச்சல் ஓசையைக் கேட்ட தலைமை ஆசிரியர் ஓடோடி வந்து பெண் வார்டனைக் காப்பாற்றியபோது அவள் மயங்கி அறைக்குள்ளே விழுந்து கிடந்தாள்.

தவறை உணர்ந்து வருந்தினார்!

மாணவர்களது இந்தச் செயல் டிரினிடாட் கல்லூரிப் பொறுப்பாளர்களுக்குப் பெருத்த வேதனையைக் கொடுத்தது. ஆஸ்லர் தான் இதற்குக் காரணம் என்பதை அறிந்த நிர்வாகம் அவரைக் கடுமையாகத் தண்டித்தது. ஆனால், பள்ளியை விட்டு நீக்காமல் ஜான்சன் ஆஸ்லரைக் காப்பாற்றி விட்டார். இதனால் ஜான்சனும் - பவலும் அவரிடம் பழகுவதை நிறுத்திக் கொண்டார்கள்.

நண்பர்கள் இருவரும் ஆஸ்லரிடம் நட்புக் கொள்ளாமல் நிறுத்திக் கொண்டதைக் கண்டு ஆஸ்லர் மன வருத்தமடைந்தார். பேராசிரியரும் ஜான்சனும் ஆஸ்லர் தவறை மன்னித்து முன்பு போலவே அவர்கள் இருவரும் ஆஸ்லரிடம் பழக ஆரம்பித்தார்கள். ஆஸ்லர் மனமும் மாறியது.

மனம் திருந்திய ஆஸ்லர், எந்த மாணவருடனும் பேசாமல், தானுண்டு - கல்வியுண்டு என்ற நிலையில் நடந்து வந்த மனமாற்றம், ஜான்சனுக்கும் - பவலுக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியது.