பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

71


போக்கிரியாக, வம்பனாக வாழ்ந்து நாள்தோறும் சண்டைச் சச்சரவுகளைச் செய்து கொண்டிருந்தான் - வட அமெரிக்காவின் மேல் பகுதியில் உள்ள கனடா நாட்டின் டன்டாஸ் என்ற நகரில்.

அந்தக் குறும்பன், சுட்டிப் பயல்களின் தலைவன், வம்பு சண்டைகளை வரவேற்று தண்டனைகளை அனுபவித்தவன் தான் வில்லியம் ஆஸ்லர் அவன் இப்போது மருத்துவ படிப்பின் மேதையாக டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறான் என்றால் இது என்ன சாதாரணமான சம்பவம் ஆகுமா?

டைபாய்டு, இதய நோய், காலார போன்ற நோய்களை அழிப்பதற்கான மருந்துகள், தடுப்பு முறைகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து உலகுக்கு மருத்துவக் கொடையாக வழங்கினான் என்றால் - இது என்ன வேடிக்கை செயலா? விளையாட்டு வினைகளா? சற்றே எண்ணிப் பார்ப்போருக்குத்தான் வில்லியம் ஆஸ்லரின் மருத்துவத் திறமையை, வாழ்க்கை முன்னேற்றத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

வில்லியம் ஆஸ்லர் மருத்துவ விஞ்ஞானத்தில் பட்டம் பெற்று மருத்துவரானது மட்டுமன்று; அதற்கு மேலும் என்ன கல்வி கற்கலாம் என்று சிந்தனை செய்தார். தொட்டனைத்துறும் மணற்கேணி தானே கல்வி? அதனைக் கற்றனைத்துறும் போதெல்லாம் அறிவு சுரக்கத்தானே செய்யும்? அதற்கேற்றவாறு, இலண்டன், பாரீஸ், பெர்லின், வியன்னா போன்ற பெரும் நகரங்களுக்கு எல்லாம் ஆஸ்லர் சென்றார்.

அங்கங்கே இரண்டாண்டுகள் தங்கிப் படித்து, தனது மருத்துவத் துறை அறிவுக்கு அனுபவம் தேடிக் கொண்டதோடு, அந்தந்த நாடுகளிலே வாழும் புகழ்பெற்ற மருத்துவ ஞானிகளைச் சந்தித்துக் கலந்துரையாடி தலைசிறந்த மருத்துவத் துறை டாக்டர் என்ற பெயரையும் - புகழையும் அவர் பெற்றார்.

அனுபவக் கல்வியும், ஏட்டுக் கல்வியும் ஒரு சேரப் பெற்ற வில்லியம் ஆஸ்லர்; இறுதியாக இங்கிலாந்து நாடு வந்து இலண்டன் நகரிலே தங்கி, மருத்துவத் துறையிலே ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.