உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மருத்துவ விஞ்ஞானிகள்



மருத்துவ உலகத்தில் அவருக்கென ஒரு தனியான தகுதியான மரியாதை மதிப்பு, புகழ், கைராசி மருத்துவர் என்ற வாழ்த்துக்கள் எல்லாம் தானாகவே அவரைத் தேடி நாடி வந்தன.

மனசாட்சிக்கு விரோதமில்லாத தனது ஆராய்ச்சித் திறமையால்,நோய்கள் வந்தால் அதை விரைவாகக் குணப்படுத்தும் முறையினைக் கையாள்வார் ஆஸ்லர். இந்த முறையை முதன் முதலாகக் கண்டுபிடித்தவரும் வில்லியம் ஆஸ்லர்தான்.

இவ்வாறு ஆஸ்லர் கண்டுபிடித்ததின் பயனால், மருத்துவ விஞ்ஞானத்தில் பண்டைய மருத்துவ முறையைக் கையாளாமல், புதிய முறைகளைப் புகுத்தினார். இதனாலும், ஆஸ்லர் புகழ் பெற்றார். இந்தப் புகழும் - பேரும் மருத்துவத் துறை முழுவதும் பரவியது.

மாண்ட்ரியல் பொது மருத்துவமனையில் பயிற்சி பெற்றவர் அல்லரா ஆஸ்லர்? அதனால் அந்த மருத்துவமனையிலே அந்த நிர்வாகம் அவரை மருத்துவராக நியமித்தது.

ஆஸ்லர் அந்த மருத்துவமனையில் மருத்துவராக நியமனம் செய்யப்பட்ட பின்புதான், அந்த மருத்துவமனை மக்களிடம் பெரும் புகழ் பெற்று விளங்கியது. இவர் வந்த பிறகுதான் அங்கே புதுப் புது மருத்துவ முறைகள் கையாளப்பட்டன. மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கான சிகிச்சை முறைகள் புகுத்தப்பட்டன. பொது மருத்துவமனையில் அன்று வரைக் கையாளப்பட்ட பழைய மருத்துவ முறைகள் எல்லாம் அகற்றப்பட்டு நவீன முறைகள் நடமாடின.

மருத்துவ மனைகளைப் பற்றி மக்களிடம் உலாவிய வெறுப்புகள், அருவருப்புகள், நோயாளிகளிடம் குடி கொண்டு இருந்த பய உணர்வுகள் அனைத்தும் அகற்றப்பட்டவை மட்டுமல்ல; நோயாளிகள் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும், வீடுகளில் இருந்து கொண்டே சிகிச்சை பெறலாம் என்ற எண்ணத்தையும் - ஆஸ்லர் மக்களிடமிருந்து அகற்றினார்.