இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சர். ரொனால்டு ரோஸ் |
மலேரியா மர்ம நோய் அல்ல;
அதற்கு மூல காரணம் கண்டவர்!
அதற்கு மூல காரணம் கண்டவர்!
மனிதனுடைய இன்றைய நாகரிக வளர்ச்சிக் காலத்திலும் கூட, எண்னற்றக் கொடிய நோய்கள் அவனைத் தாக்கிக் கொன்று கொண்டேதான் இருக்கின்றன.
இந்தக் கொடிய நோய்களை ஒழித்துக் கட்டிட மனித குலம் இன்று வரைப் போராடிக் கொண்டேதான் இருக்கின்றது. எத்தனையோ அறிஞர் பெருமக்கள் தோன்றி அந்த நோய்களை ஆணிவேரோடு அழித்திட போராடியே வருகிறார்கள்.
அத்தகைய மருத்துவ விஞ்ஞானிகளுள் சர்.ரொனால்டு ரோஸ் என்பவரும் ஒருவர். அவர் மலேரியா என்னும் மிகக் கோரமான காய்ச்சல் வியாதியை ஒழித்து மனித சமுதாயத்தைக் காப்பாற்றிய மருத்துவ மன்னராகத் திகழ்ந்துள்ளார்.
மலேரியா என்ற கொடிய காய்ச்சல்; பெரும்பாலும் வெப்பம் அதிகமான நாட்டில்தான் தோன்றுகிறது. குளிர் அதிகமான இடங்களில் மலேரியா பெரும்பாலும் அதிகமாக வருவதில்லை.