பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

87


கொசு விரட்டியின் ஆராய்ச்சி!

கொஞ்சம் கொஞ்சமாகப் பூந்தொட்டிகள் மேல் பறந்து பறந்து மொய்த்துக் கொண்டிருந்த கொசுக்கள், நாளடைவில் வீட்டிற்குள்ளும் புகுந்து கடிக்க ஆரம்பித்து விட்டன. அதனால் அவரது பெற்றோர்களுக்கும், சகோதரர்களுக்கும் இரவு உறக்கமே கெட்டுவிட்டது. கொசுக்களை விரட்டுவதுவே அவர்களது இரவு வேலைகளாகிவிட்டது.

இந்தக் கொசுக்களை எப்படி விரட்டுவது என்று ரோஸ் அப்போதுதான் சிந்திக்க ஆரம்பித்தார். அதனால் சன்னல்களிலே வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை அப்புறப்படுத்தினார் ரோஸ்.

கொசு விரட்டியாகவே நாம் இருந்தால், மருத்துவப் பணி கெட்டு விடுமே என்று எண்ணிய ரோஸ், கொசுக்களை விரட்டுவதற்காகவும், அது சம்பந்தப்பட்ட பூந்தொட்டிகளைக் கண்காணிப்பதற்காகவும் ஒரு பணியாளை நியமித்தார். அவரையும் பயன்படுத்திக் கொண்டு இரவு நேரங்களில் கொசுக்களை விரட்டிக் கொண்டே இருந்தார். எவ்வளவு நேரம் தான் இப்படியே கண்விழித்து விரட்டிக் கொண்டிருக்க முடியும் கொசுக் கும்பல்களை?

கொசுவைக் கொல்வது : ஹிம்சை தொழில்!

வேலைக்கு அமர்த்தப்பட்ட பணியாள் சற்று இரக்க சுபாவம் உடையவனாக இருந்தான். அவனுக்கு இந்த கொசு விரட்டும் வேலை அறவே பிடிக்கவில்லை. காரணம், ஓர் உயிரை அடித்துக் கொல்வது பாவம் என்று அவன் எண்ணினான்.

ஒரு நாள் அந்த வேலைக்காரன் ரோசிடம், ‘ஐயா, நாம் இயற்கையை எதிர்க்கக் கூடாது. கொசு படைப்பு இயற்கையின் உற்பத்தி! அதை அடித்துத் துன்புறுத்துவது மகா பாவம்! கொசுவால் ஏற்படும் துன்பங்களை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமே ஒழிய, அவற்றைக் கொல்லக் கூடாது என்று அகிம்சை உபதேசம் செய்வது போல பேசினான்.