பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

91


நோயும் வரவில்லை. இதிலிருந்து மலேரியா நோய் வருவதற்குக் காரணம்; கொசுக் கடிகள்தான் என்று புரிந்து கொண்டார் ரோஸ்.

தங்கும் அறை, சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, பருகும் நீர், இடம், பொருள் எல்லாமே ஒன்றாக இருக்க, தனக்கு மலேரியா வரவில்லை; நண்பனுக்கு மட்டும் அந்த நோய் வந்ததேன்? என்பதை ரோஸ் புரிந்து கொண்டார் எனவே, மலேரியா நோய்க்கு மூல காரணம் கொசுக்கள்தான் என்பதில் சந்தேகம் இல்லை என்பதை ரோஸ் உணர்ந்தார்.

உணவு, காற்று, தண்ணி மூலமாக மலேரியா நோய் வரவில்லை; கொசுக்கடி மூலம்தான் அது தோன்றுகிறது என்பதைத் தீர்க்கமாக ரோஸ் அறிந்தார். எனவே, மலேரியா நோய் வருவதற்கு மூலம் எது? கொசு என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டார் அவர்.

ஏற்கனவே ரோஸ் நடத்திய கொசுக்கடி ஆராய்ச்சிக்குரிய கருப்பொருள் கொசு என்பதை உணர்ந்து விட்டரோஸ்,மீண்டும் தனது கொசு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

ரோஸ் அன்று முதல் கொசுக்கடி ஆராய்ச்சியை மேலும் தீவிரப்படுத்தினார். வீண் பொழுதுப் போக்கை வெறுத்தார்; முழுக் கவனத்தையும் தனது ஆய்விலேயே ஈடுபடுத்தினார்.

பாட்ரிக் மான்சனும் : ரொனால்டு ரோசும்!

அந்த ஆராய்ச்சி தீவிரப்பட்டபோது, ரோசுக்கு பாட்ரிக் மான்சன் என்பவருடைய நட்பு 1891-ஆம் ஆண்டில் கிடைத்தது. அவர் மலேரியா நோய் பரவுவதற்குக் காரணமே கொசுதான் என்ற முடிவை உடையவர். இங்கிலாந்து நாட்டு மருத்துவ மனையில் அவர் பணி செய்து கொண்டிருந்தார்.

கொசு மூலம்தான் மலேரியா நோய் பரவுகின்றது என்றால் எப்படி? என்பதைக் கண்டறிய முனைந்த ரோஸ், நாம் உண்ணும் உணவில் கொசு தனது நச்சுத் தன்மையைச் செலுத்துவதால், அது உடலுக்குள் சென்றவர்க்கு நோயை உண்டாக்கும், என்ற காரணத்தையும் அவர் கண்டறிந்தார்.