பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலிகை வைத்திய அகராதிப் பெயர்கள்

கணி: வேங்கை மரத்தின் பெயர். கணி என்பதன் நேர்ப் பொருள் சோதிடன் என்பது, வேங்கை மலர்ந்தால், திருமணம் செய்யும் காலம் வந்தது என்று கொள்ளப்படும். சோதிடன்போல் காலம் அறிவித்தலின், வேங்கை ஒப்புமை யால் கணி எனப்பட்டது. இ.சா. - மன்ற வேங்கை மணநாள் பூத்த' - அகநானூறு - 2, கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்'- பழமொழி நானூறு-120.

கான விந்திரன்: இது கொடு வேலி. காட்டில் இந்திரன், (அரசன்) போல், தன் விருப்பமாகச் செழித்திருப்பதால் இப்பெயர்த் தாயிற்று. இடம் சார்பு.

குடை: இது வேலமரம். வேலமர இனங்களுள் குடை வேல் என்பதும் ஒன்று. குடைபோல் கவிந்திருப்பதால் குடை எனப்பட்டது. ஒப்புமை.

குதிரைப் பல்லன்: வெள்ளைப் பூண்டின் உள்ளீடு ஒவ்வொன்றும் குதிரைப்பல் போல் இருப்பதால் இப் பெயர்த்தாயிற்று. ஒப்புமை - வடிவம்.

கொடியோன்: இது கற்றாழை. இதனால் உடலுக்குப் பல நன்மைகள் உண்டெனினும், இது, இரும்பை உருகச் செய்து நீறாக்குமாதலின் கொடியோன் எனப்பட்டது போலும். பண்பு. இது இரும்பைப் பொன்னாக்கும் என்று அகத்தியர் குணபாடம் கூறும்:

“ ஆஞ்சிவந்த கற்றாழை அங்கம் குளிர்விக்கும்; பாய்ஞ்சு அயத்தைப் பொன்னாக்கும் பார்’

என்பது பாடல் பகுதி,