பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மர இனப் பெயர்கள்

விருக்கநாதன் = அரசமரம் இது. விருக்கம் = மரம்; நாதன் = தலைவன்-அரசன். எனவே, அரசமரம் விருக்க நாதன் எனப்பட்டது. சொல் விளையாட்டு - மொழி பெயர்ப்பு.

விழை = கரும்பு இது. விழை=விருப்பம். விழையப் படுவது-விரும்பப்படுவது விழை, கரும்பு விரும்பப்படும் பொருள் ஆதலின் விழை எனப்பட்டது. 'கரும்பு தின்னக் கூலியா?” என்னும் பழமொழி ஈண்டு எண்ணற்பாலது. வயது முதிர்ந்தோர் கரும்பு தின்னுவ தில்லையே! என்று கூறலாம். கரும்போடு நின்றுவிடக் கூடாது; கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரை - கற்கண்டு ஆகியவற்றையும், சர்க்கரை கலந்து செய்யப்படும் இனிப்புப் பண்டங்களையுங் கூட ஈண்டு நினைவு செய்துகொள்ள வேண்டும். எனவே, கரும்பு விழையாயிற்று. சார்பு.

விள்ளோடன்=விள் ஒடன் = விள்ளோடன். தின்னும் தேங்காய்ப் பகுதி வன்மையான ஒட்டிற்குள் இருக்கும். அந்த ஒடு கொட்டாங்கச்சி என வடதமிழ் நாட்டிலும், சிரட்டை எனத் தென்தமிழ் நாட்டிலும், மலையாள மொழி யிலும் கூறப்படும். முதிர்ந்து நாள்பட்ட தேங்காயில், ஒடாகிய கொட்டாங்கச்சி வேறாகவும், உள்ளிருக்கும் வெண்மையான சதைப் பகுதி வேறாகவும் விண்டுவிடும். விண்ட சதைப்பற்றைக் கொப்பரை என்பர். இந்தக் கொப்பரையைச் செக்கில் இட்டு ஆட்டித் தேங்காய் எண்ணெய் எடுப்பர். இந்த நிலையில் உள்ள தேங்காய் தான் விள்ளோடன் ஆகும். ஒட்டிலிருந்து விண்ட (விள்ளப் பட்ட) காய் ஆதலின் இது விள்ளோடன் எனப்பட்டது. விள்ளல் என்றால், நீங்கல் - பிரிதல் - விலகல்-வேறாதல். வடிவம்.

வைரவன்=சிவனது கூறு (அம்சம்) உடைய கடவுள் வைரவன், இவ்வைரவன் வலிமை - வீரம் மிக்கவர்.