பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 37

" பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே

என்பேதை செல்லற்கு இயைந்தனளே,'

என்னும் பொய்யாமொழிப் புலவரின் பாடல் காண்க.

காமாலை அத்திசுர நாசினி

மஞ்சள் காமாலையையும், உள் காய்ச்சலையும் போக்கும் திருநாமப் பாலை இப்பெயர் பெற்றது. அத்தி= எலும்பு; அத்தி சுரம்= எலும்புக்குள் சுரம். உள் காய்ச்சலை அத்தி சுரம் என நாட்டு மருத்துவர் கூறுவர். இவ்விரு நோய்களையும் போக்குவதால் திருநாமப் பாலை என்னும் பூடு இப்பெயர் பெற்றது. பயன்.

காமாலை நிவர்த்தி

மஞ்சள் காமாலையைப் போக்குவதில் சிறந்த கீழா நெல்லி இப்பெயர் பெற்றது. பயன்.

காயின் பனை = ஆண் பனை காய்க்காது; பெண் பனையே காய்க்கும் எனவே, பெண்பனை 'காயின் பனை’ எனப்பட்டது. வடிவம்.

கார் காய்: கார்காலமாகிய கார்த்திகைத் திங்களில் காய்க்கும் ஒருவகை மாங்காய் இப்பெயர் பெற்றது. காலம்.

கானகத்துக்கு அதிபதி

தூதுவளையில் முள் இருப்பதால், அதை யாரும் எதுவும் அணுக முடியாமையால், அது காட்டுக்குத் தலைவன்போல் தொல்லையின்றி உள்ளது. அதனால் இப் பெயர் பெற்றது. இது சார்பு. தூதுவளைக்குச் சந்து நடந் தான் என்னும் பெயரும் உண்டு. சந்து என்பதற்குத் தூது என்னும் பொருள் உண்டு. தூது என்பது இக்கொடிப் பெயரின் முன் உள்ளது. எனவே, இது, சொல் விளையாட் டாகச் 'சந்து நடந்தான்’ எனப்பட்டது.