உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாத்திரைப் படலம்

119

ஈனாப் பேச்சிபோல்[1] எங்களை வெருட்டின
மதினியின் மீதும் வருத்தமொன் றில்லை. 115
காயம் மணக்குமோ? காஞ்சிரம் இனிக்குமோ?
இயற்கையை மாற்ற யாரால் முடியும்!
இவையெலாம் அல்ல. என்றென்றைக்கும் என்
மனத்தி லிருந்து வாளா யறுப்பது!
நெஞ்சி லிருந்து நெருப்பா யெரிவது? 120
மற்று அக்காரியம் வையக மெல்லாம்
அறியும் படியான் அறைவேன். அம்மா!
கணவரின் மரண காலத்து அங்கு
வந்திருந்தவர் என் மகனை நோக்கி,
"தம்பி! உன் தந்தை தலைமாட்டிருந்து. 125
திருவா சகத்தில் சிற்சில பதிகம்
படி"யெனச் சொல்லிப் பண்ணை வீட்டி
லிருந்து ஒரு புத்தகம் எடுத்துக் கொடுத்தனர்.
பயலும் அதனைத் திறந்து பார்த்தான்.
'ஆரே தமிழை அறிபவர்?' என்றான்; 130
'பள்ளியில் தமிழும் படித்தேனோ?" என்றான்;
'பரீக்ஷையில் தமிழொரு பாடமோ?' என்றான்;
'என்னால் படிக்க இயலாது' என்னச்
சுவரிற் சாய்ந்து சும்மா இருந்தான்.[2]
ஐயோ! 135


  1. 114. ஈனாப்பேச்சி - மகவு பெறாத பேய்ச்சி ஒரு பிசாசு. ஈனா அரக்கி என்றும் சொல்வர்.
  2. 130-5 கொஞ்ச காலத்துக்கு முன், திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் தமிழர் வாழும் நாடான நாஞ்சில் நாட்டிலுங்கூட. பாடசாலைகளில் மலையாளமொழியே கற்பித்து வந்தார்கள். ஆரம்பக்கல்வியும் தமிழிலே கிடையாது; மலையாளத்தில்தான்; இது காரணமாக இந்தப் பையனுக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை.