பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

மாவீரன் மயிலப்பன்

ஆதுரம் மிக்க கண்களுடன் தனது கணவனை அவரால் பார்க்க முடிந்ததேயொழிய பேசும் நிலையில் அபிராமி இல்லை. உடனிருந்த அவரது தமக்கை "தம்பி; இப்பொழுதாவது வந்து சேர்ந்தாயே; அதுபோதும் அவள் இனி தேறி விடுவாள்" என்ற தொடக்கத்துடன் அபிராமிக்கு இராமநாதபுரம் கோட்டைச்சிறையில் இருக்கும் பொழுது ஏற்பட்ட உடல்நலிவையும் கடந்த பத்து நாட்களாக இங்கு வீட்டிற்கு வந்த பிறகு நிலைமை மோசமாகி விடடதையும் விவரித்துச் சொன்னார்.

சேதுபதி மன்னருக்காகப் படைக்கலம் ஏந்திப் போரிட்ட பொழுது, ஏற்படாத அச்சமும் வேதனையும் சேர்வைக்காரரது இதயத்தைக் கவ்வியது. தனது பொதுநலச் சேவைக்கும், போராட்ட வாழ்விற்கும் பக்க துணையாக இத்துணை ஆண்டுகாலமும் இருந்து வந்து ஊக்குவித்து வந்தவள் அல்லவா அபிராமி என அவர் எண்ணிப் பார்க்கும்போது இந்த உலகம் ஒரு துளி அளவு கூட ஒளியில்லாத இருண்ட சூன்யமாகத் தோன்றியது. கட்டிலில் போர்வையினால் மூடப்பட்டு, படுக்கையோடு படுக்கையாக ஒட்டி உலர்ந்து கிடந்த அபிராமியைப் பார்க்கும்பொழுது, சேர்வைக்காரரது வாழ்க்கையில் என்றுமே உணர்ந்திராத வேதனையால் விம்மும் நெஞ்சத்துடன் நிலைகுலைந்து நின்றார்.

அப்பொழுது, திடீரென பதினான்கு முரடர்கள் அங்கு நுழைந்து மயிலப்பன் சேர்வைக்காரரைத் தள்ளிவிட்டு தரையில் கிடத்தி அவரைக் கயிற்றால் பிணைத்தனர். ஒ எவ்வளவு தான் முயன்றும் அவர்களது அழுத்தமான பிடியிலிருந்து மீளமுடியாமல் தவித்தார். அவரது தமக்கையார் போட்ட கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ள எவரும் உதவிக்கு ஓடிவரவில்லை.

'அடப்பாவிகளா! கைக்கூலி பெறுவதற்குத்தானே என்னைப் பிடித்து இருக்கிறீர்கள் அந்தப் பணத்தை நான் தருகிறேன். என்னை விட்டு விடுங்கள்! என அந்த முரடர்களிடம் சொன்னார்.