பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறவர் சீமை

அவரது மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியைக் கும்பெனியார் கைது செய்து திருச்சிக் கோட்டையிலும், பின்னர் சென்னைக் கோட்டையிலும் அடைத்த பிறகு அவரது பட்ட மகிஷி ராஜேஸ்வரி நாச்சியாரையும் அவரது ஒரே மகள் சிவகாமி நாச்சியாரையும் சந்திக்க முடியாமலேயே பின்னர் சென்னையில் உயிர் துறந்தார். அந்த வகையில் மயிலப்பன் சேர்வைக்காரருக்கு மனைவியைக் கடைசியாகப் பார்க்க முடிந்ததே! ஏனெனில் அவரது மரணம் கும்பெனியாரது கைகளில் எற்படுவது நிச்சயம். நாளை அல்லது நாளை மறுநாள் அல்லது அடுத்த சில நாட்கள் உறுதி.

ஆனால் ஓரிரு கவலைகள் மட்டும் அவரது உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்தன. கமுதிக் கோட்டையில் நிகழ்ந்த போர்களில் வீரமரணம் எய்தாமல் கும்பெனியாரின் கைதியாக அவர்களது ஆயுதங்களால் குற்றவாளிபோல மரணத்தைத் தழுவப்போகிறோமோ என்பது. மற்றொன்று. மறவர் சீமை மக்களிடம் தமக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களைப் பலமுறை அணிதிரளச் செய்து ராஜவிசுவாசத்துடனும் நாட்டுப் பற்றுடனும் வெள்ளையரது ஆட்சிக்கு எதிராகப் போராடச் செய்தும், அதனால் மக்களுக்குப் பல இழப்புகள் ஏற்பட்டபோதிலும், அவரது முயற்சிகள் வெற்றிபெறாமல் விழலுக்கு இறைந்த நீர் போலாகிவிட்டதே! சேதுபதி மன்னரை இனிமேல் யார் முனைந்து போராடி மீட்டி வந்து இராமலிங்க விலாசம் - அரண்மனை அரியாசனத்தில் அமரச் செய்வார்கள்? காலம் என்பது கறங்குபோல் சுழன்று வருவது அல்லவா? வீரத்தையும் மானத்தையும் இழந்து இழிநிலை அடைந்துள்ள இந்த மறவர் சீமை மக்கள் மீண்டும் வீறு கொண்டு எழுவார்கள். வாளையும், வேலையும் விட்டெறிந்துவிட்டு வெள்ளையர்களுக்கு எதிராக வெடிமருந்தையும், துப்பாக்கியையும், பீரங்கியையும் பயன்படுத்தி இந்தச் சீமையிலிருந்து வெகுண்டு ஓடச் செய்வார்கள்! ஆம் அந்த நாள் வரத்தான் போகிறது.....