199
மாவீரன் மயிலப்பன்
எனப்படுவதா? அதனை இன்றுதான் கும்பெனியார் அதிகாரப் பூர்வமாக அறிவித்து உறுதிப்படுத்தி விட்டனர். எப்படியும், இன்னும் இரு வாரங்களுக்குள் சென்னையில் இருந்து கும்பெனி கவர்னரது ஒப்புதல் உத்திரவு வந்துவிடும் என்பது உறுதி.
விசாரணை மன்றத்தில் இருந்து திரும்ப அழைத்து வரப்பெற்று சிறைக்கூடத்தில் அடைக்கப்பெற்ற மயிலப்பன் சேர்வைக்காரர் சிந்தனையில் சிலிர்த்து நின்ற எண்ணங்கள். எவ்விதக் குழப்பங்கள் இல்லாத தெளிவான கருத்துக்கள்.
இந்தக் கருத்தோட்டத்தில் அவரை அழுத்தி வந்தது ஒரே ஒரு குறை மட்டும்தான். அதாவது அவரது ஆழ்ந்த ராஜவிசுவாசத்திற்கும், மரியாதைக்குரிய முத்துராமலிங்க சேதுபதி மன்னரை மீண்டும் சந்திக்க முடியாமல் இறந்துவிடப் போகிறோமே என்ற ஒரே கவலைதான். அந்த வாய்ப்பு கிடைக்குமானால், வரலாற்றுப் புகழ்மிக்க சேதுநாட்டை இராமபிரானது பாதுகைகளை வைத்து வழிபாடு செய்து அயோத்தியை ஆட்சி செய்த பரதனைப்போல, புனித வாழ்க்கையை மேற்கொண்டு ஆட்சி செய்த மரபினரது புனித பூமியை, வல்லுறுக் கூட்டங்கள் போல வந்து தங்களை வெடிமருந்து ஆயுத வலிமையினால் ஆக்கிரமித்துள்ள வெள்ளைப் பரங்கிகளை, வேரோடு கிள்ளி எறிவதற்கு முயன்று வந்த வேளையில் இந்த மரணம் வந்துவிட்டது என்பதை மட்டும் அவரிடம் வேதனையுடன் தெரிவித்து விட்டிருப்பேன்.
பிறந்த மண்ணையும் அந்த மண்ணின் மகிமையையும் போற்றிக் காக்கும் இந்தப் புனிதப் போரில் இரண்டு ஆண்டுகளாக மறவர் சீமையின் மூலை முடுக்களில் எல்லாம் நூற்றுக்கணக்கான வீர இளைஞர்களைக் காவு கொண்ட சுதந்திர பலிபீடத்தில் அவர்கள் கொட்டிய குருதி இன்னும் உறைந்து கிடக்கிறது. காய்ந்து மறைந்து விடவில்லை. அந்தப் போருக்கு இன்னும் முடிவு ஏற்படவில்லை.