பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

மாவீரன் மயிலப்பன் - -

பாளையக்காரர்கள் நவாப்பிற்கு செலுத்தும் வருடக் காணிக்கையையும், பரங்கியரே பெற்றுக் கொள்ளத்தக்க உரிமை, அதாவது தனது தலையைமட்டும் கூடாரத்திற்குள் நீட்டி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட ஒட்டகம், பின்னர் கூடாரம் முழுவதையும் தன்வசப் படுத்திக்கொண்ட கதைதான் கும்பெனியாருடையதும். தனது இயலாத் தன்மையை நன்கு உணர்ந்த நவாப் வாலாஜா முகமது அலி வேறு வழியில்லாமல் கும்பெனியாரது நிபந்தனை எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு, அவரது ஆடம்பர வாழ்க்கைக்குக் குந்தகம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.

இவ்விதம் கும்பெனியார்களது கூலிப்படையைக் கொண்டு மதுரை, நெல்லை சீமைப் பாளையங்களை அடக்கி ஒடுக்கி கிஸ்திப் பணத்தை வசூலித்து முடித்தபொழுதும், இதுவரை யாருக்குமே கப்பம் கட்டாமல் மூன்று தன்னரசுகள் தமிழ் மண்ணில் இருந்து வருவதை நவாப் உணர்ந்தார். அவை மறவர் சீமை இராமநாதபுரம் சேதுபதி, சிவகெங்கைச் சீமை உடையாத் தேவர், கள்ளர் சீமை புதுக்கோட்டை தொண்டைமான். இவர்களில் புதுக்கோட்டைத் தொண்டைமானுக்கு இராமநாதபுரம், சிவகெங்கை அரசர்கள் உறவினராக இருந்தும்கூட அவர்க்ளிடம் நேச முறையில் நடந்து கொள்ளாமல் அந்நியர்களான ஆற்காட்டு நவாப், வெள்ளைக்கும்பெனியார்களது தொடர்பையும், அவர்களுக்குத் தொண்டு செய்வதையே உயர்வாகக் கருதியதால், அவரைப் பாக்கிதாரர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, சேதுபதி சீமையையும், சிவகெங்கைச் சீமையையும் ஆயுத பலத்தைக் கொண்டு அடக்கி கப்பம் வசூலிக்கத் திட்டமிட்டார் நவாப். தொடக்கத்தில் ஒத்துழைக்க மறுத்த கும்பெனியார், அக்கினியில் வெந்தது போக, கிடைத்தது ஆதாயம் என்று மறவர் சீமை மீது படை நடத்த சம்மதித்தனர்."

திருச்சியிலிருந்த கும்பெனி தளபதி ஜோஸப் சுமித் நவாப்பின் மகன் உம்தத்துல் உம்ரா ஆகியவர்களது கூட்டுத் தலைமையில் இராமநாதபுரம் நோக்கிப் படைகள் புறப்பட்டன. கி.பி.1772ஆம் ஆண்டு மே மாதக் கடைசியில் இராமநாதபுரம் கோட்டையை இந்தப்

17. Dr. Rajayyan- History of Madurai 1972. 18. VIBART - Lt. Col. History of Madras Engineers