பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

=மறவர் சீமை

மிகுந்தவர்களாகவும், இந்த அணி இப்பொழுது பதினாயிரம் பேருக்கும் அதிகமான எண்ணிக்கையில் உயர்ந்து இருந்தது."

பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் உள்ள சேதுபதி மன்னருக்கு ஆதரவாக இவர்கள் அனைவரும் இயங்குவதால் இவர்கள் திருச்சிராப்பள்ளிக்கும் சென்று சேதுபதி மன்னரைத் தப்பிவிக்கும் முயற்சியில் ஈடுபடலாம். ஆதலால், மன்னரை வடக்கே வெகுதூரத்தில் உள்ள நெல்லூர் போன்ற இராணுவப் பாசறைக்கு மாற்றப்படவேண்டும் என்றும் கும்பெனித் தலைமையைக் கேட்டுக் கொண்டார்" இராமநாதபுரம் சீமை கலெக்டர்.

அத்துடன், மீண்டும் நான்கு கள்ளர்களை முதுகளத்தூர் பகுதி குடியானவர்களைப் போல மாறுடையில் முதுகளத்தூர் பகுதிக்கு அனுப்பி வைத்தார் கலெக்டர். உண்மையான நிலவரத்தை அறிந்து வர அவர்களில் ஒருவர் ம்ட்டும் கிளர்ச்சிக்காரர்கள் பற்றிய சில தகவல்களை இராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தான். நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. நிர்வாகம் செயல்படவில்லை என்பதைக்கண்டு உணர்ந்த உளவாளி கலெக்டருக்கும் தகவல் அளித்தான். தாம் கலெக்டராகப் பணியேற்று மூன்று மாதங்களுக்குள் தமது நிர்வாகத்திற்கு இத்தகைய சோதனையும், நெருக்கடியும் ஏற்படும் என கலெக்டர் லூவிங்டனால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. மிகவும் பதட்டத்துடன் செயல்பட்டார்.

முதுகளத்துார் பகுதியில் தெற்குப் பகுதியை ஒட்டியுள்ள திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்த காடல்குடி, நாகலாபுரம் எட்டயபுரம், பாஞ்சாலக்குறிச்சி பாளையம் மக்களும், மறவர் சீமை மக்களுக்கு ஆதரவாகவும், பரங்கிகளுக்கு எதிராகவும் செயல்பட்டனர். 23.04.1797ல் மறவர் சீமையில் தொடங்கிய வரி கொடா இயக்கத்தின் பொழுதும் மறவர் சீமை மக்களுக்குத் துணை நின்றவர்கள் இந்த பக்கத்துச் சீமை பாளையக்காரர்கள்தான்.

29. Dr. K.Rajayyan - History of Madurai 1972.