பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

НР மறவர் சீமை

இதனையும் மீறி, வன்முறையில் விவசாயிகளிடமிருந்து பங்குநெல்லைக் கைப்பற்றி அவர்களது சேகரம் பட்டறையில் வைத்து பாதுகாக்கப்பட்ட நெல்லை கிளர்ச்சிக்காரர்கள் கொள்ளையிட்டு கடத்திச் சென்றனர்.இராஜசிங்கமங்கலம், அறுநூத்திமங்கலம், அனுமந்தக்குடி ஆகிய பகுதிகளில் இவ்விதம் கும்பெனியாரது சேகரம் பட்டறைகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நெல்லின் மதிப்பு ஸ்டார், பக்கோடா பணத்தில் 244731.6.33 எனக் கும்பெனியாரது ஆவணம் ஒன்றிலிருந்து தெரியவருகிறது." கும்பெனியாரது இழப்பிற்கு பிரதான காரணிகள் ஜகந்நாத ஐயனும், குமாரத்தேவனும் என்று குறிப்பிடத் தேவையில்லை. ஆதலால், முதுகளத்துாரிலிருந்து இராமநாதபுரம் வந்த தளபதி மில்லரது முதல் வேலை, இந்த இரு மக்கள் தலைவர்களையும் பிடித்து தண்டிப்பது என்பது. அதற்காக மில்லர், சாலை வசதிகள் இல்லாத இராஜசிங்கமங்கலம் பகுதிகளில், கம்பெனியாரது தொங்கு சதைகளாக விளங்கிய மக்கள் துரோகிகளுடன் குதிரைகளில் அலைந்து வந்தான். மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த இரு தலைவர்களது மறைவிடங்களை வன்னியத்தேவன் என்ற கைக்கூலியால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்"

இவர்களையடுத்து இன்னொரு நாட்டுப்பற்றாளரான திருக்கண்ணத் தேவரையும் மிகுந்த சிரமங்களிடையே மில்லர் கைது செய்தான். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் கோட்டையில் அடைக்கப்பட்டனர். ஜகந்நாத ஐயனுக்கும் குமாரத்தேவனுக்கும் நீதி விசாரணை என்ற பெயரில் தண்டனை வழங்கப்பட்டன. குற்றம் சாட்டுபவர் மில்லர், குற்றம் எனத் தீர்மானித்து நீதி வழங்கியவரும் தர்மப் பிரபு மில்லர் தலைமையிலான நீதிக் குழுதான்." "யானைகளைப் பிணிக்கப் பயன்படும் கனமான இருப்பு சங்கிலிகளில் இவ்விருவரும் விலங்கிடப்பட்டிருப்பினும் இவ்விருவருக்கும் ஆயிரம் கசையடிகள் கொடுக்குமாறு உத்திரவிட்டான். ஜகந்நாத ஐயனுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து" அவரை தொலைதூரத்தில் உள்ள பினாங்கு தீவிற்கு நாடுகடத்த உத்தரவிட்டனர்.

57. Madurai District Records vol 1142/136 1803/108 58. Madurai District Records vol 1219/20 24.09 1801 p.p. 114 59. Revenue Sundries vol 26/20.09.1801. 60. Revenue Consultation Vol.26/02.10.1801/18-R3