பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



13

மலையருவியும் வாழ்க்கைப் பயணம் குறித்து அதிகம் சிந்திக்கிறார்.

ஒட்டகத்தின் முதுகில் நடத்திய
ஓயா நாடகம்
ஓயப்போகிறதா?

நாகரீகப் பாலையில்
நொண்டிய ஒட்டகம்
நடப்பதை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதா?

பணப்பேய் ஒட்டகம்
பயணத்தைப் பாதியில்
நிறுத்தத் திட்டமா?

என்றெல்லாம் யோசிக்கிறார். வாழ்க்கை, 'பயனற்ற பயணம்’ ஆகவே படுகிறது அவருக்கு.

பொதுவாகப் பலருக்கும் இந்த வாழ்க்கை அர்த்தமற்றதாகவேப் படுகிறது. அதை மலையருவி இப்படிக் குறிப்பிடுகிறார் ஒரு இடத்தில்_

வாழ்ந்த தாள்களில்
வாடிக்கை தவிர
வேடிக்கை ஒன்றுமில்லை
வரைந்த நாட்களில்
தேய்ந்தவை தவிர
தேர்ந்தவை ஒன்றுமில்லை.

மனிதர்கள் பிரமாதமாக வாழ்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள். பெருமையாகப் பேசி மகிழ்ந்து போகிறார்கள். நினைவு அசை போட்டுச் சிலிர்த்துக் கிறங்குகிறார்கள். உண்மை நிலை என்ன?