பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலையருவி கவிதைகள்

நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ள தமிழ் கவிதையில், தற்காலத்தில், முக்கியமான இரண்டு போக்குகள் நிலவுகின்றன.

ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இக்கவிதைப் போக்குகள் மரபுக் கவிதை என்றும் புதுக் கவிதை என்றும் அறியப்படுகின்றன.

இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டது மரபுக் கவிதை. இந்தப் போக்கை ஆதரிப்பவர்கள் தடம் விழுந்த பாதையிலேயே தளர் நடைபோட்டு வந்ததால், வாழ்க்கையின் சிக்கல்களுக்கும் காலவேகம் கொண்டு சேர்க்கிற புதுமைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட கவிதை இடம் அமைத்துக் கொடுக்காததனால், மரபை மீறும் போக்கு தலை தூக்கியது. காலத்தின் தேவையாகத் தோன்றிய இயல்பான பரிணாமமே அது.