அபாலோ
87
நேரம், தேர் நேர்வழி சென்றது. பிறகோ! புரவிகள் புயலாயின! ப்யேடனால் அடக்க முடியவில்லை. தேர், பாதையைவிட்டு ஓட ஆரம்பித்தது—ப்யேடன் மிரண்டுவிட்டான். சூரிய ரதம் பாதை தவறி ஓடுவது கண்டு பதைக்காதார் இல்லை. சந்திரன் நட்சத்திரம் யாவும் மிரண்டு ஓடலாயின, தேரின் கீழ் சிக்காதிருக்க. பூமிக்கு அருகே சூரிய ரதம்! கடல் வற்றுகிறது, வெப்பத்தால் ஆறுகள் மணல் மேடுகளாகின்றன! காடுகள், நெருப்பாகின்றன! மக்கள் கருத்துப்போகிறார்கள். எங்கும் ஒரே திகில்! ஒரே கதறல்! அழிவுக்காலம் நெருங்கிவிட்டதோ என்று அனைவரும் அலறுகின்றனர். ஒரே அல்லோல கல்லோலம். ப்யேடனுக்குப் பெரும்பீதி, ரதமோ புயல் வேகத்திலே!
பூலோகவாசிகளின் புலம்பல் கேட்டு, நித்திரையிலிருந்து ஜூவஸ் விழித்துக்கொண்டார்.—நொடியில் விஷயம் தெரிந்துவிட்டது—இடியாயுதத்தை வீசி, ப்யேடனைக் கொன்று, பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார். தேர் என்ன ஆயிற்று—இடியாயுதம் தேரை நொறுக்கிற்றா, என்றெல்லாம் கேட்கக்கூடாது. புராணமென்றால், கேட்டுக் கொள்ளவேண்டும்—நம்பிக்கையுடன்—கேள்விகள், பாபச் சின்னங்கள்!!
அபாலோவின் காதல் விளைவுகள் பலவும் இப்படி அரும்பிலேயே அழிக்கப்பட்டுப் போயின. அபாலோமீது அடங்காத காதல் கொண்டிருந்தாள், கிளைட்டை என்ற கன்னி! அந்தக் காதலை அபாலோ பொருட்படுத்தவே இல்லை. அவளோ, அபாலோ ரதத்தில் ஏறிச்செல்லும் திக்கையே நோக்கியவண்ணம் இருந்துவந்தாள். கடைசியில் அவளுடைய பரிதாபகரமான நிலைகண்டு, மற்றக் கடவுளர், அவளைச் சூரியகாந்திப் பூவாக்கிவிட்டனர்.