உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

மாஜி கடவுள்கள்


ஏழு பெண்—எனவே நானே பாக்யசாலி!—என்று பேசினாள், கோபம் பிறந்தது லாடோனாவுக்கு. ஹீராதேவியாரிடம் கொடுமை பல அனுபவித்த லாடோனா, தானே கொடுமைக்காரியாக மாறினாள். அதிலும், நையோபி, அபாலோ, ஆரிட்டிமிஸ் இருவருக்கும் பூஜைகள் செய்வது தேவையற்ற காரியம் என்று கூறினதும் கோபம் அதிகரித்தது. மகனையும் மகளையும் அழைத்து அந்த மமதை கொண்டவளின் மக்களைக் கொன்றுவிட்டு வாருங்கள் என்று கட்டளையிட்டாள். காரணமற்ற கோபம்! கருணையற்ற செயல்! எனினும் மாதாவின் கட்டளை, மீறலாமா? மீறினாரா, தந்தை ஜமதகனியின் கட்டளையை, பரசுராமர்; தாயின் தலையை வெட்டினாரல்லவா?

கிளம்பினர், அபாலோவும் ஆர்ட்டிமிசும். ஆண்களை அபாலோ அழித்தார்—பெண்களை ஆர்ட்டிமிஸ் கொன்றாள். கடைக்கோட்டி பெண் குழந்தை தாயின் மார்பிலே ஒட்டிக்கொண்டதாம் திகிலுடன்—நையோபி அழுதபடி கெஞ்சினாள், இந்தக் குழந்தையையாவது கொல்லாமல் விடுக, என்று. இந்த நிலை கண்டு, மற்றக் கடவுளர் மனம் இளகிற்று. இந்த ஒரு குழந்தையை விட்டுவிடு, என்று ஆர்ட்டிமிசுக்குச் சொல்லித் தடுத்தனர் போலும் என்று எண்ணுகிறீர்களா! இல்லை, இல்லை! நையோபியை, குழந்தையுடன் கல்லுருவாக்கிவிட்டனர்.

தாயின் சொல்கேட்டு, கொலைபாதகச் செயல் புரிந்த ஆர்ட்டிமிஸ்தான் குளிர்ச்சி தரும் நிலவொளியை வழங்கி வந்தாள்.

அபாலோ போலவே அழகு, ஆர்ட்டிமிசிடம் குடி கொண்டிருந்தது. தேவருலகு பெருமூச்செறிந்தது அவளை எண்ணி எண்ணி. அவளோ கன்னியாகவே காலந்தள்ள உறுதிகொண்டு ஜூவசிடம் வாதாடி, வரம்