உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


முழுமுதற் கடவுள் ஜூவஸ் தேவனுக்கு ஒருநாள் தாங்கமுடியாத மண்டைக் குடைச்சல்!! மண்டைக் குடைச்சலால் அவதிப்பட்ட மகேசனுக்கு, மருந்திட தேவர் பலர் முனைந்தனர்—யாராலும் முடியவில்லை தலைவலியைப் போக்க. கடவுளர் உலகே கலங்குகிறது. கடைசியில் ஜுவசே, தன் மகன் ஹீபாஸ்டஸ் என்பானை அழைத்து; “கோடரி கொண்டு என் மண்டையைப் பிள!” என்று உத்தரவிட்டார். தந்தைசொல் மீறாத தனயனும் அதுபோலவே செய்தான். மண்டை பிளந்ததும், உள்ளேயிருந்து, வடிவழகுடன் வெளிவந்தாள் அதீனே என்ற கடவுள்—குழந்தை வடிவிலே அல்ல, பருவ மங்கையாக, சகல அலங்காரத்துடன்.

அதீனே

பொறாமை, போட்டியுணர்ச்சி, அடுத்துக்கெடுத்தல், ஆகாதவழி காட்டல், அருவருப்பு, ஆதிக்கவெறி என்பன போன்றவைகள், கெட்ட குணங்கள், இவைகளைக் களைந்தெறிந்தால் மட்டுமே மனிதன் பண்புடையவனாவான், மாநிலத்தின் மாண்பும் வளரும் என்பதை அனைவரும் கூறுவர். ஆனால், புராணங்களை, இங்குள்ள ஏடுகளை மட்டுமல்ல, எந்த நாட்டுப் புராண ஏடுகளைப் பார்த்தாலும், கடவுள்களின் லீலைகள் என்று கூறப்படும் நடவடிக்கைகள் பலவும், இத்தகைய தீயகுணங்களின் விளைவுகளாகவே இருந்திடக் காணலாம். மனிதரிலேயே, நல்லவன் ஒருவனுடைய வாழ்க்கைமுறை, தீயவழி