உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மாஜி கடவுள்கள்


தும், மகேசனின் மண்டைக் குடைச்சல் போய்விட்டது. தேவ மருத்துவர், பிறகு செய்யவேண்டியதைச் செய்து ஜுவசை முன்போலாக்கினர். மண்டையிற் பிறந்த அதீனே தேவதை, தற்காப்புக்காக நடத்தும் போர், சமாதானம், நெசவு என்பவைகளுக்கு அதிபதியானாள். கடவுளர் வரிசையில் இடம்பெற்றாள். அதீனே என்று கிரேக்கர் கொண்டாடும் இந்தத் தேவதையை, ரோம் நாட்டவர், மினர்வா என்ற பெயரிட்டுக் கொண்டாடினர். அம்மைக்கு அமோகமான திருவிழாக்கள்—சிறந்த சிலைகள்—அழகிய கோயில்கள்! கிரேக்க சாம்ராஜ்யத் தலைநகரின் பெயர், ஏதன்ஸ்—இந்தத் திருநகரின் பெயரே, இந்த அம்மையின் திருநாமத்தை ஒட்டித்தான் அமைந்தது. அதீனே, எப்போதும் ஜூவசின் உடனிருந்து ஆலோசனை கூறிவரும் அந்தஸ்த்து பெற்றுத் திகழ்ந்தார்கள். தற்காப்புக்காக யார் போரில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு தேவியின் ‘அருள்’ கிடைக்குமாம்.

இந்தத் தேவியாருக்கு பொறாமை மூண்டுவிட்டது ஒரு சம்பவத்தால்.

பூலோகத்திலே ஒரு மங்கை—அழகி—நெசவு வேலையிலே திறமைமிக்கவள். என்போலத் திறமைசாலி, பூலோகத்திலே மட்டுமல்ல தேவலோகத்திலும் கிடையாது என்று வீரம் பேசினாளாம். அதீனே தேவதைக்குக் கோபம் கொப்பளித்தது. கிழவிபோல வடிவமெடுத்து, பூலோகம் சென்று, அந்த மங்கையைக் கண்டு, நயமாகவும் பயமாகவும் எச்சரிக்கை செய்தார். “விண்ணிலே உள்ள அதீனே தேவதையே போட்டியிட்டாலும் வெற்றி எனக்குத்தான்” என்று அந்தப் பெண் பேசிட அதீனே கோபம் மிகுதியாகி தன் உருவைக் காட்டி, ‘போட்டி’ ஆரம்பமாகட்டும் என்றார். இருவரும்