ஆர்ட்டிமிஸ்
101
விதவிதமான வண்ணங்கள் கொண்டதும், சித்திரவேலைப்பாடுகள் நிரம்பியதுமான ஆடைகளை ‘நெய்து’ காட்டினர். அதீனேவுக்கே வெற்றி கிட்டும் என்பதை அறிந்து கொண்ட அசட்டுப் பெண் தூக்கிட்டுக்கொண்டு மாண்டு போனாள். மமதை பிடித்தவளை மாண்டாலும் சும்மாவிடக்கூடாது என்று எண்ணிய அதீனே, அவளைச் சிலந்தியாகும்படிச் சாபமிட்டுவிட்டாள். பிறகே கோபம் தணிந்தது. விண்ணகம் சென்றாள் இந்த விசித்திர தேவதை. சிலந்தி சதா, ‘வலை’ பின்னிக்கொண்டே இருக்கிறதல்லவா—ஏன்?-இதுதான் காரணம்—அதீனேவின் சாபம்!—என்று புராணீகன் விளக்கமும் தந்தான். இந்தப் பொய்யுரைகளை மறுக்கும் நெஞ்சு உரம் இல்லாததால், அதீனேவுக்குப் பூஜை பலசெய்து ‘அவள் அருளை’ப் பெற மக்கள் கோயில்களில் குவிந்தனர். இன்றும் அதீனே கோயிலின் ‘இடிபாடு’ ஏதன்ஸ் நகரில் காணப்படுகிறது. நாற்பது அடி உயரமுள்ள அழகிய சிலையைச் சமைத்து, பிரமாண்டமான கோயில் கட்டி அதிலே ‘பிரதிஷ்டை’ செய்து நெடுங்காலம், அதீனே தேவதையைப் பூஜித்து வந்தனர்—கிரீசிலும், ரோம் நாட்டிலும் அவ்வளவு செல்வாக்கும் மளமளவெனச் சரிந்து போய்விட்டது, உண்மை அறிவு மக்கள் உள்ளத்தில் இடம் பெற்ற காரணத்தால். இன்று சிலந்தியைக் காட்டி, அதீனே புராணம் பேசுவோர் அங்கு கிடையாது. நாமோ அணிலின் முதுகின் மீதுள்ள மூன்று பொன்னிற வரிகளைக் காட்டி, ஐயன் தடவிக்கொடுத்தான் என்று ஆத்தீகம் பேசுகிறோம். அங்கெல்லாம் அறிவுக்குப் பொருந்தாத கதைகளின்மீது கடவுட்கொள்கை கட்டப்படுவது கூடாது என்பதை உணர்ந்துகொண்டனர்—அதீனேவை மாஜியாக்கிவிட்டனர்.
❖