உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுதேவன் பேகஸ்

105


—மதிமுக விலாசா!—என்று அணங்கு பாட, விண்ணகம் தன்னில் காணேன் உன் விழியின் அழகுபோலே!! என்று அவர் பாட, ஆனந்தமாக இருந்து வந்தனர் போலும். விஷயம் எப்படியோ, அம்மைக்குத் தெரிந்துவிட்டது. ஹீரா தேவியார், தன் கணவனின் காமலீலை பற்றிக் கேள்விப்பட்டதும் கடுங்கோபம் கொண்டார்கள். இதைக் கருக்கித் தீருவது என்று முடிவுசெய்து ஒரு தாதி போல் வேடமணிந்து பூலோகம் சென்று, செமிலியிடம் பழகினார்கள்.

கடவுளையே காதலனாகப் பெற்ற காரிகையிடமிருந்து, பக்குவமாகப் பேசி, பாசத்துடன் பழகி, உண்மையை அறிந்து கொண்டார்கள். பிறகு தந்திரம் புரிந்தார் தேவியார்.

“பைத்தியமே, பைத்தியமே! எவனோ ஒரு எத்தன்—ஏய்க்கிறான். அவன் மொழி கேட்டு மயங்கிவிட்டாயே! உன்முகம், மலர்! பற்கள் முத்து, மேனி பசும்பொன்! எழில் அரசிளங்குமரி, நீ—உன்னை யாரோ ஒரு நாடோடி வென்றுவிட்டான்”

“தோழீ! துடுக்குத்தனமாகப் பேசாதே—வடிவழகனடி என் காதலன்! வானவில்லிலே உள்ள வர்ணஜாலம் அவ்வளவும் அவர் முக விலாசத்திலே காண்கிறேன். அவர் வாய் திறந்தால், அமிர்தமடி, அமிர்தம், என் செவியில் பாய்கிறது! அவர் தொட்டால் உடல் சிலிர்க்கிறது. கட்டி அணைத்தால்,...ஆஹா!!”

“அழகனாக இருக்கட்டுமடி, அனுபவமற்றவளே! அவன், கடவுள் என்று கூறுகிறாயே!...கடவுளா!”

“சாதாரணக் கடவுளல்லடி, சுவையறியாதவளே! ழுமுதற் கடவுள், தேவதேவன் ஜூவஸ்!!”