உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுதேவன் பேகஸ்

107


அதே விதமாகிவிட்டது. ஜூவஸ், செமிலியிடம் தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை மட்டுமே காப்பாற்றமுடிந்தது. அந்த தேவப்பிரசாதம்தான், பேகஸ்.

பேகசின் பிறப்புக்கு இப்படி ஒரு புராணம். பொறுத்தம் பார்த்தல், காரணம் கேட்பது, ஆகியவை கூடாது என்பது பூஜாரியின் சட்டம். பூபதிகள் பூஜாரிகளுக்குத் துணை நின்றனர். எனவே இந்த அர்த்தமற்ற கதை ஆத்தீகமாகத் திகழ்ந்தது, பல காலம்.

பேகசைத் தொலைக்கவும், ஹீராதேவியார் பல முயற்சி செய்தார்கள்—ஜூவசின் தயவால் பேகஸ் தப்பினான்.

திராட்சைப் பழச் சாறைக்கொண்டு போதை தரும் பானத்தைத் தயாரிக்கும் முறையை, மாந்தருக்கு இந்தத் தேவன் கற்றுக் கொடுத்தான்—இதன் காரணமாகவே பூஜிக்கப்பட்டு வந்தான்.

வெறி ஏறும் விதமாகக் குடித்துவிட்டுக் கூத்தாடும் விழா பரவிற்று. ஆடவரும் பெண்டிரும் மதுதேவனின் பூஜை என்று கூறிக்கொண்டு மனம் போனவாறு ஆடலாயினர். இந்த அக்ரமத்தை ஆத்திகம் என்றும் கூசாது கூறினர். இதைத் தீப்ஸ் நாட்டு மன்னன் வெறுத்தான். பேகசின் சீடன் ஒருவனைப் பிடித்து விசாரணை நடத்தினான்—பேகஸ் கோபம் கொண்டு, அந்த மன்னனை அவன் நாட்டு மக்களைக் கொண்டே சாகடித்தான். பேகஸ் விழா கொண்டாடினராம் அந்த நாட்டு மக்கள்—அதாவது குடித்துவிட்டுக் கூத்தாடினர். அப்போது அவர்கள் கண்களுக்கு, தங்கள் மன்னன் காட்டுப்பன்றிபோல் தெரிந்தாராம். பேகசின் வேலைத்திறம் அது என்கிறான் புராணீகன். குடிவெறியில் இருந்த மக்கள் மன்னனைக் குத்திக் கொன்றுவிட்டார்களாம்.