உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீனஸ்

111


அவதார மகிமையைப் பாடிய கவிஞன் இருந்திருந்தால், வில்லிபோல் பெரும்போரைச் சித்திர நடையில் பாடி இருந்திருந்தால், பழங்காலக் கற்பனைகள், பழங்காலக் கடவுட் கொள்கைகள் பாழ்பட்டுப் போயிரா! அங்கெல்லாம் அருங்கவிவாணர்கள், ஐயன் ஆடியபாதத்தின் அற்புதத்தையும் அம்மையின் அருளொழுகும் கண்களின் வடிவழகையும், பாடினாரில்லை, எனவேதான், பழைய கொள்கைகள் பாழ்பட்டுப் போயின, என்று எண்ணுகின்றனர்—மக்களிடையே இந்த வகையான பிரசாரமும் செய்கின்றனர். கலைமூலம் கற்காலக் கடவுட் கொள்கையைக் காப்பாற்றலாம் என்று எண்ணுகின்றனர்.

ஹோமர், வெர்ஜில், ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி, கீட்ஸ், டிரைடன்,—கவிதா மண்டலத்திலே இவர்கள் உன்னதமான இடம் பெற்றவர்கள் என்பதை மறுப்பவர் கிடையாது. இந்நாட்டுப் பழம்பெரும் கவிவாணர்களிடம் காணப்படும், கற்பனைத்திறமும், கவர்ச்சிகரமும், இவர்களிடமும் ஏராளமான அளவு இருக்கத்தான் செய்தன. காவியச் சுவை சொட்டும் கவிதைகளை அவர்களும் தத்தமது நாட்டவருக்குத் தந்தனர். மக்கள் அவர்தம் ‘கவிதா சக்தி’யைப் போற்றினர்—போற்றியும் வருகின்றனர். நம்நாட்டுக் கவிவாணர்கள் போலவே, மேற்கோள், உவமை, என்பனவற்றுக்கும், அவர்களும், பழம் புராணக் கதைகளையே பயன்படுத்திக் கவிபாடினர். எனினும், கற்காலக் கடவுட் கோட்பாட்டை அவர்களின் ‘கவிதை’ காப்பாற்றி விடவில்லை. நல்ல கவிதை! அழகான நடை! சுவையுள்ள கற்பனை!—என்று அந்தக் கவிவாணர்களின் திறமையைப் பாராட்டிவிட்டு, கடவுட் சம்பந்தமான கருத்துக்களுக்கு, அறிவின் துணையைத் தேடினர்.—முன்னேற்றம் கண்டனர்.