112
மாஜி கடவுளகள்
இன்று மாஜி கடவுள்கள் பட்டியலில் காணப்படும் பெயர்களை, கவிவாணர்கள், தமது கவிதைகளிலே இணைத்துவிட்டுத்தான் போயினர்! மாஜி கடவுள்களின் ‘லீலா விநோதங்களை’க் கவிதை வடிவிலே, மக்களிடம் கூறித்தான் பார்த்தனர்—எனினும், அறிவு வளர்ச்சியைக் கலை உணர்ச்சி கெடுக்கவில்லை. தங்கக் கூண்டிலே பஞ்சவர்ணக் கிளியை வளர்க்கிறோம், பாலும் பழமும் தருகிறோம், இனியமொழி கேட்க. பேசும் கிளி, குழியில் விழு! விழு குழியில்!—என்று கொஞ்சு மொழியில் கூறினால், சிரிப்பார்களேயன்றி, அதற்குப் பேசும்திறன் வந்ததே என்று மகிழ்ந்து ஒரு கொவ்வைக் கனி தருவரேயன்றி, ஆசைக்கிளியே, இதோ வீழ்கிறேன் குழியில் என்று கூறி, யாரும் குழியில் விழமாட்டார்களல்லவா! அதுபோலவே, அந்நாட்டு அறிவாளிகள், கவிதை அருமையானது எனினும் கருத்து காலத்துக்கு ஒவ்வாதது என்று கண்டறிந்து, புராணத்தை விலக்கி, கவிதையை ரசித்தனர். கவிதை வடிவிலே இருக்கிற காரணத்தால், உள்ளத்துக்கு மகிழ்வை ஊட்டும் கவர்ச்சியுள்ள முறையிலே கவிதைகள் இருப்பதால், அந்தக் கருத்துக்களைக் கைவிடக் கூடாது என்றோர் பொது விதிக்கு உலகம் கட்டுப்பட்டிருந்திருக்குமானால், ஜூவசும் ஹீராவும், அபாலோவும் பிறரும் இன்றும் கோயில் கொண்டு எழுந்தருளி கோலாகலமான திருவிழாக்களைக் கண்டுகளித்துக் கொண்டிருந்திருப்பர்—மாஜிகளாகியிருந்திருக்கமாட்டார்கள்.
கடல்நுரை, வனப்புள்ள காட்சியல்லவா! தூய வெள்ளை நிறம்—தொட்டால் நீராகச் சொட்டி மறையும், பலப்பல சொட்டுகளை உள்ளடக்கிய நுரை, பாங்குடன் காட்சி தருகிறதல்லவா—இதைக் கண்ட, கற்பனைத்திறம் படைத்த ஒருவன், ஒரு தெய்வத்தைச் சிருஷ்டித்துவிட்டான். கடல் நுரையிலிருந்து பிறந்தவள்தான், பேரழகி