உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மாஜி கடவுள்கள்


ரூபம் படைத்தவன். கடுகடுத்த முகம்! நொண்டிக் காலன்!

இவள்போல் அழகியை எங்கும் கண்டதில்லை, என்றனர் வீனசைக் கண்டு. இவன் போன்ற அவலட்சணமானவன் எங்கும் கிடையாது, என்ற ஏளனத்துக்கு ஆளாகி, கடவுளருலகிலே களிப்புடன் உலவுவதையும் வெறுத்து, ஒதுங்கி வாழ்ந்து வந்தவன் வல்கன். இவர்களைத் தம்பதிகளாக்கினார் தயாபரன்.

பொன்னிற மேனி! பூவிதழ்க் கன்னம்! செம்பவள் அதரம்! முத்துப்பற்கள்! மோகனப் புன்னகை! மோன நிலையையும் முறியடிக்கும் பார்வை! துடியிடை தோகை மயிலனையாள்! இவ்வளவு எழில் ததும்பும் கன்னியை, அருவருப்பைக் கிளரும் உருவம் படைத்த வல்கனுக்குத் தாரமாக்குகிறீரே! முழுமுதற் கடவுளே! கன்னி என்ன கதியாவாள்! இந்தப் பொருந்தாத் திருமணம் வேண்டாம்! கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் தள்ளிவிடலாம் இந்தத் தையலை! நொண்டிக் காலனுடன் இந்த நேரிழையாள் எப்படி இல்லறம் நடத்துவாள்!—என்று பலப்பல கூறி, கடவுளர் தடுத்தனரா? இல்லை!! வீனசாவது இந்த விபரீதம் வேண்டாம் என்று கூறி விம்மினாளா? இல்லை! அவர் தந்த கணவன் இவர்—இருக்கட்டும் இவரும்—இதயத்தை வெல்பவன் வேறொருவன் கிடைக்காமற்போவானா!—என்றெண்ணிக்கொண்டாள். கொண்ட கணவனுக்குத் துரோகம் செய்யும் காதகியா, கடவுளர் வரிசையிலே வைத்துப் போற்றப்பட்டாள் என்று கோபத்துடன் கேட்கத் தோன்றும். ஆமாம், ஐயா, ஆமாம்! வீனஸ் தேவி, விண்ணுலக அழகி, மக்களின் பூஜைக்குரியவளாகத்தான் இருந்து வந்தாள், மக்களின் மனம் பூஜாரி கையில் மெழுகாக இருந்தவரையில்!