உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீனஸ்

115


நொண்டிக்கால் தேவனுடன் சென்று வாழ்ந்து வந்தாள், பேரழகி வீனஸ்.

வல்கன் தேவனுக்குக் கால் நொண்டி, உருவம் அவலட்சணம், ஆனால் இவனும் சாமான்யமானவனல்ல. சாட்சாத் ஜூவஸ் தேவனின், மகன்தான் இவனும். ஹீரா தேவியாராம் அன்னையிடம் ‘பக்தி’யும் கொண்டவனாகத்தான் இருந்து வந்தான். ஒருநாள், ஹீராவின் தொல்லையால் கோபம் மூண்டது ஜுவசுக்கு. உடனே அவர், ஒரு தங்கச் சங்கிலியில் அவளைக் கட்டி, விண்ணிலிருந்து, மண்ணுலகத்துக்குத் தொங்கவிட்டார். இதைக் கண்ட மகன் மனம் பதறி தங்கச் சங்கிலி மண்ணுலகம் போகாதபடி தடுக்கத் தன் முழுவலிமையையும் உபயோகித்தான். தந்தைக்குத் தாங்கொணாக் கோபம் பிறந்தது—தனயனைத் தூக்கி எறிந்தார் பூவுலகுக்கு. கீழே விழுந்த போதுதான், வல்கனுக்குக் கால் முறிந்துவிட்டது.

கடவுளர் உலக நடவடிக்கைதான்!

முழுமுதற் கடவுளாக, கிரேக்கராலும், ரோம் நாட்டவராலும், போற்றப்பட்ட ஜுவஸ் தேவனின் குடும்ப நிலை இவ்வண்ணம்!!

கீழே வீழ்ந்து வேதனைப்பட்ட வல்கனை, தாயார், செத்தானா பிழைத்தானா என்றுகூடக் கவனிக்கவில்லை. எந்தத் தாயாருக்காகத் தந்தையின் கோபத்தைத் தாங்கிக்கொண்டு, காலையும் இழந்தானோ, அந்தத் தாய், தன்னிடம் துளி அன்பும் காட்டாத்து கண்ட வல்கனுக்கு, மனம் உடைந்துவிட்டது—கடவுளர் உலகா இது, காதகர் உறைவிடம், இனி அங்கு செல்லேன், என்னை இம்சைக்கும் இழிவுக்கும் ஆளாக்கியவர்களுக்குத் தக்க பாடம் கற்பிப்பேன் என்று சூளுரைத்துவிட்டு, எட்னா மலைமீது, ஒரு பெரிய உலைக்கூடம் அமைத்துக்கொண்டு, நெற்றியில்