வீனஸ்
117
தான் குடி—எனினும் விண்ணவருக்குள், குடி, சாதாரணம் என்பது மட்டுமல்ல; அந்த இலாக்காவைப் பரிபாலிக்கவே ஒரு தனிக் கடவுள்—அவர் பெயர்தான் பேகஸ்!
பேகஸ் கிளம்பினான் வல்கனிடம்! மதுவைத் தந்தான்—மயங்கினான் நொண்டிக் கடவுள். விண்ணகம் வந்தான், மாதாவை விடுவித்தான். ஓர் அளவுக்குச் சமரசம் ஏற்பட்டது. தங்கமாளிகைகளைக் கட்டிக் கொடுத்தான் பல கடவுளருக்கு—தந்தைக்கு இடியாயுதம் செய்து தந்தான். எனினும், விண்ணகத்திலேயே இருந்துவிட அவன் மனம் ஒப்பவில்லை. எட்னா மலைமீதே வசித்து வரலானான்.
இங்குதான் வந்து சேர்ந்தாள், வடிவழகி வீனஸ்.
ஆற்றோரத்தில், முந்திரிச் சோலையில், ஓடி ஆடிப் பாடிக்கொண்டு, காதலன் கண்ணைப் பொத்த, அவன் கரத்தை விலக்க முயலும்போது அவன் தன்னை அணைத்துக்கொள்ள, ஐய்யய்யோ—என்று இவள் பாட, அவன், கன்னத்தைக் கிள்ளி இதழமுது கேட்க, ஊஹும் என்று இவள் கொஞ்ச இன்னுயிரே என்று அவன் கெஞ்ச, இப்படி இன்ப விளையாட்டில் ஈடுபட்டிருக்க வேண்டியவள், மலைமீது ஓர் உலைக்கூடம், பெரு நெருப்புக்கு எதிரே இரும்பைக் காய்ச்சுவதும், அடிப்பதும் வளைப்பதுமான வேலையில் ஈடுபட்ட அவலட்சணமான கணவன்—இந்தக் சூழ்நிலையில் எப்படி இருக்கமுடியும்! உதட்டை மடித்தபடி கடித்தாள், புருவத்தைச் சிறிதளவு நெறித்தாள் யோசனை உதித்தது—காதலைத் தேடிக்கொண்டாள். கடவுள் ஒருவன் கிடைத்தான்!
போர்க் கடவுள் மார்ஸ் என்பான்தான், வீனஸ் பெற்ற புதுவிருந்து.