118
மாஜி கடவுள்கள்
ஒவ்வோர் இரவும், மார்ஸ் வீனஸ் இல்லம் வருவான், இன்பம் பெறுவான்.
இது, அபாலோ கடவுளுக்குத் தெரிந்துவிட்டது. வல்கனிடம் தெரிவித்துவிட்டார். கடுங்கோபம் கொண்டான் வல்கன். என்ன செய்வது! கடவுளல்லவா, ஒரு அபூர்வமான யோசனை உதித்தது. பித்தளைக் கம்பிகளைக்கொண்டு ஒரு அபூர்வமான வலை—சிலந்திக்கூடு போன்ற வலை—செய்தான். பார்ப்பதற்குச் சாதாரணப் போர்வை போலவே இருக்கும்—ஆனால் பொறியாக மாறிவிடும், நொடிப்போதில். இந்த மாய வலையை, வீனசின் மஞ்சத்திலே வீசிவிட்டு, மறைவிடத்தில் தங்கியிருந்தான். மார்ஸ் வழக்கப்படி வந்தான், வீனஸ் கொஞ்சினாள், மஞ்சம் சென்றனர், கொஞ்சுமொழி வளர்ந்து, குழைந்து, ஓய்ந்தது—இறுகத் தழுவினர் அன்றும், என்றும்போல்—மறைந்திருந்த கணவன், மாயவலையை இழுத்தான் காதற் கள்வர்கள், காகூவெனக் கூவினர், வலையில் சிக்கிக்கொண்டு! விடுபட முடியவில்லை! வல்கன் வலை இலேசானதா! சிக்கிக்கொண்டீர்களா! சிரிப்பாயக் சிரிக்க வைக்கிறேன் பார்!—என்றுகூறி, வெளியே சென்று, எல்லாக் கடவுளரையும் அழைத்து வந்தான் வல்கன். “வாருங்கள், வாருங்கள்! வந்து பாருங்கள், என்னை மணந்துகொண்ட காதகி, என் வீட்டில், என் மஞ்சத்தில் சோர நாயகனை ஆறத் தழுவிக்கொண்டுள்ள காட்சியை, விழியுள்ளோர் அனைவரும் காண வாருங்கள்”—என்று அழைத்து வந்து காட்டினான். தமது அணைப்பிலிருந்து விடுபட முடியாதபடி, மாயவலை அவர்களை இறுகப் பிணைத்து விட்டிருக்கிறது—கடவுளர் யாவரும், கைகொட்டிச் சிரித்தனர்! கடவுளருலகுக்குப் பலகாலம், இந்தச் சம்பவம் வேடிக்கைப் பேச்சுக்குப் பயன்பட்டதாம்!