உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

மாஜி கடவுள்கள்


லைக் கிளறிடும் கட்டழகனாகவல்லவா ஆகிவிட்டான்—அவள் என்ன செய்வாள் பாபம்—அவனைத் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்கிறாள்—அவனை வளர்த்து வந்தாளே, வேறோர் தேவி, அவள் இணங்கவில்லை—இரு இன்பவல்லிகளுக்கிடையே சிக்கித் தவிக்கிறான் அடனாய்ஸ்—எனும் ஆணழகன். சிக்கல் நிறைந்த இந்த வழக்கு, முழுமுதற் கடவுளின் மன்றம் வந்தது. நாலு மாதம் வீனசுடன், நாலுமாதம் வளர்த்த தேவியுடன், மற்ற நாலுமாதம் உன் இஷ்டம்போல், என்று தீர்ப்பளித்தாராம், ஜவஸ்!

என்னென்ன விதமான காமக் கூத்துக்கள், எப்படிப்பட்ட சிக்கல்கள், வழக்குகள், கடவுளர் உலகிலே! பூஜாரிகள் இவைகளையெல்லாம் புண்ய கதைகள் என்று கூறினர்—பாமரர் நம்பினர். புலவர்கள், இவைபற்றி இலக்கியச் சுவையுடன் எழுதினர், மக்கள் படித்து ரசித்தனர்—இப்படிப்பட்ட ஆபாசங்களா, கடவுள் என்ற உயர்ந்த தத்துவ விளக்கத்துக்குத் துணைசெய்யும் மார்க்கம், என்பதுபற்றி எண்ணிப் பார்க்கத் துணிவு பிறக்கவில்லை. கேள்வி கேட்கத் தைரியம் பிறக்கவில்லை, தேவநிந்தனை செய்கிறான் என்று ஆத்தீகர்கள் கண்டிப்பரே என்ற பயம்!

கரும்பு வில்லோன், பஞ்சபாணன்—என்று இங்கு, மன்மதனைக் குறிப்பிடுகிறார்களல்லவா, புராணீகர்கள்—இந்தக் கடவுளுக்கு ஈடாகத்தான், கிரேக்க, ரோம் நாட்டவர் வீனசின் மகன், க்யூபிட் தேவனைக் கொண்டாடி வந்தனர். காதற் கணைகளைத் தொடுப்பது இந்தத் தேவனின் திருப்பணி. துள்ளுமத வேட்கைக் கணையாலே ஏற்பட்ட தொல்லைகள், கடவுளர் உலகில் திருவிளையாடல்களாகிவிட்டன.