ட்யூடன் பிரபஞ்ச உற்பத்தி
123
வெளியிலே, ஓர் குரல், கொந்தளிப்பு ஏற்பட்டது. புகை சூழ்வதுபோல, நீர் பொங்குவதுபோல, பேரொலியுடன் பெரிய ஆறுகள் புரண்டோடுவதுபோல், ஓர் நிலை ஏற்பட்டது. எல்லையற்ற வெளியிலே, இன்னதென்று புரிந்துகொள்ள முடியாத நிகழ்ச்சியின் துவக்கம். வெண்மை, கருமை, புகை, நீர், இப்படி, நிறங்களும் உருவங்களும், அசைந்து எழலாயின. மூடுபனியும், உறைந்த கட்டிகளும், தென்படலாயின. எல்லையற்ற வெளி இரு கூறாகக் காணப்பட்டது. ஒருபுறம், கொந்தளிப்பு, கருமை, புகைப்படலம்! மற்றோர் புறம், ஒளி, அழகு, அமைதி!
இருண்ட பகுதியிலே, இறைவன் கட்டளைப்படி, வெப்பக் கதிர்கள் புகுந்தன. பனி கரையலாயிற்று! ஓரளவு, கரைந்தானதும், அங்கிருந்து, மெள்ள மெள்ள, ஆடி அசைந்துகொண்டு, கிளம்பிற்று, பிரம்மாண்டமான ஓர் உருவம்! அந்த உருவம் அரைத் தூக்கத்திலேயே இருந்தது. கோரமான அந்தப் பேரசுரனின் பெயர், யெமர். விழித்தெழுந்ததும், அவனுக்குக் கடும்பசி ஏற்பட்டது. என் செய்வான்?
பசி! பசி! பசி!—சுற்றுமுற்றும் பார்க்கிறான்—பசி போக்க ஏதும் காணப்படவில்லை. எங்கும் உறைந்த பனி, உருகும் பனி, காற்று, வேறு ஏதுமில்லை. பசியோ வாட்டுகிறது. யெமர் திகைத்தான்—உண்ண ஏதேனும் கிடைக்குமா என்று அலையலானான். கடும்பசி அவனுக்கு—பெருங்காற்று அவனைச் சுற்றி. காலத்தின் துவக்கத்தில் தோன்றிய-பேரசுரன்; பெரும்பசி தாங்கமாட்டாமல், வேதனையுடன் உலவலானான். கடவுளின் கட்டளைப்படி, வெப்பக் கதிர்கள் தமது வேலையைச் செய்துகொண்டே இருந்தன. உறைந்து கிடந்த பனிக்கட்டிகள் உருகியபடி இருந்தன. யெமர் எனும் பேருருவம் தோன்றியவிதமாகவே, மற்றோர்