ட்யூடன் பிரபஞ்ச உற்பத்தி
125
உதித்தனர். தேவரசுரப் போர் மூண்டது! கடும்போர்! வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்று தீர்மானிக்க முடியாதபடியான சமர்.
இறுதியில் யெமர் வீழ்த்தப்பட்டான். வீழ்ந்த பேரசுரனின் உடல்மீது தாவினர் தேவர்கள். கழுத்து நரம்புகளை அறுத்தனர். இரத்தம் ஆறென ஓடிவரலாயிற்று. அந்த இரத்தம், வழிய, வழிய, ஆறளவிலிருந்து கடலளவாகி, அதிலேயே, யெமரின் சகாக்கள் மூழ்கி மடிந்தனர். பிறகு, யெமரின் உடலை, உலக ஆலை எனும், பொறியைச் செலுத்திக்கொண்டிருந்தவர்களிடம், தேவர்கள் தூக்கிச் சென்றனர். மாவரைக்கும் யந்திரம் போன்ற அந்தப் பொறியை ஒன்பது அசுர மாதர்கள், செலுத்திக்கொண்டிருந்தனர். அகோரக் கூச்சலுடன் ஆடிக்கொண்டிருந்த அந்த ஆலையிலே, பேரசுரனின் உடலைப்போட, உடல் சின்னாபின்னமாக்கப்பட்டது. எலும்புகள், மலைகளாக மாறின! பற்கள், பெருங்கற்களாயின! இரத்தம், கடலாயிற்று! உடல், உலகமாயிற்று! மண்டை ஓடு, வானமாயிற்று! பிரபஞ்சம், இவ்விதம் சிருஷ்டிக்கப்பட்டதும், விண்ணிலே, சூரியன் சந்திரன், நட்சத்திரங்களைப் புதைத்தனர்.
நம்புகிறீர்களா? நகைக்கிறீர்களா? நம்ப மறுப்பீர்கள்! ஆனால் இதை நம்ப மறுத்தவர்களை நாஸ்தீகர்கள் என்று நிந்தித்த, தண்டித்த மக்கள் இருந்தனர். உலகம் உண்டானவிதம் இதுதான் என்று நம்பி, பேரசுரனின் பிணமே இப்பிரபஞ்சம் என்று பேசிப், பசுவை வணங்கிய மக்கள், இருந்தனர்.
இப்படியும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் உண்டா! எல்லையற்ற வெளியிலே ஒரு பேருருவம் தோன்றுவதாம்! அதற்குப் பால்தர ஓர் பசுவாம்! அந்தப் பசுவின் நா பட்ட இடத்தில் தேவனாம்! இவ்விதமாக ஒரு கூத்தா! சே!