உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

மாஜி கடவுள்கள்


என்று கூறிடத் துணிவு கொள்வோர் ஏராளமாக இருக்க முடியும். ஒரு காலம் இருந்தது, இந்தக் கதையைத் தேவ ரகசியம் என்று பக்தியுடன் கூறிக் கொண்டாடிய காலம்!

ட்யூடன் மக்கள் பிரபஞ்சம் இவ்விதமாகத்தான் உற்பத்தி செய்யப்பட்டது என்று நம்பி, புராணம் இயற்றி அதனைத் தம் புனித ஏடெனக் கொண்டு, அதற்குத் தக்க பூஜைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.

இன்று? இந்தக் கதையை நம்புகிற கூட்டம், மேனாட்டிலே, பித்தர் விடுதிகளிலேயும் கிடைத்தலரிது. மேனாட்டிலே, ஜெர்மனி, இத்தாலி, போலந்து, கிரீஸ், எந்த நாட்டிலேயும் சரி, சென்று அங்குள்ள பேராசிரியர்களை அல்ல, விஞ்ஞானிகளை அல்ல, கல்லூரி மாணவர்களை அல்ல, வயலில் வேலை செய்வோர், ஆலைத்தோழர் போன்றவர்களைக் கூடச் சரி, அப்பா! பிரபஞ்சம் உண்டான கதை தெரியுமா? யெமரின் பிரதாபம், ப்யூரின் பேரழகு, ஆதும்லாவின் அன்பு, தேவாசுரப் போர், இவை தெரியுமா? என்று கேட்டால், கேட்பவனின் மனம் குழம்பிக் கிடக்கிறது என்று எண்ணி விறைத்துப் பார்ப்பரே தவிர, “ஆமாம்! அந்தத் தேவமா கதையை மறப்பாரும் உண்டோ! அதோ பாரும், அரசமரம், அதனருகே சென்று கிழக்குத் திசையாகச் சென்றால் ஒரு காத தூரத்தில், ஆதும்லா ஆலயம் காணலாம்—அங்கு ஆண்டுக்கொருமுறை, கல்பசுவின் காம்பிலிருந்து பால் பெருகும்! ஆண்டுக்கோர் முறை யெமர் கழுத்தறுப்பு விழா நடைபெறும்”—என்று கூறமாட்டார்கள், ஏனெனில், அறிவுக்கதிர் பரவியதும், மூளையில் படிந்திருந்த மூடுபனி கரைந்து போய்விடவே, அங்கு சாதாரண மக்களுக்கும் இப்போது, தெளிவு பிறந்துவிட்டது. பிரபஞ்சம் உண்டான விதம் எப்படி என்று கேட்டால், அதற்கென்று உள்ள பிரத்யேக விஞ்ஞான நூற்களைக் காட்டுவர். மலையும் மாகடலும், நதியும் நவநிதியும், காடும்