உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ட்யூடன் பிரபஞ்ச உற்பத்தி

127


மேடும், சூரியனும் சந்திரனும், ஒளிவிடு கதிர்களும், மழை விடு மேகமும், அலையும், ஆவியும், இன்னோரன்ன இயற்கைச் சக்திகளும், சக்திகளை உள்ளடக்கிய பொருள்களும், ஏற்பட்ட வகைப்பற்றி, எண்ணற்ற அறிஞர்கள். சிந்தித்துச் சிந்தித்து, பரீட்சித்து, கண்டறிந்த உண்மைகளை, ஏடுகளாக்கி, புதிய எண்ணங்களை உலவவிட்டனர். இதன் பயனாக பழைய நாட்களிலே கட்டிவிடப்பட்ட கதைகள், சீந்துவாரற்றுப் போயின.

எந்த நாட்டிலும், ஆதிகாலத்திலே, மக்கள் குருட்டறிவு பெற்றவராகத்தான் இருந்திருக்க முடியும். இன்று பாமர மக்களுக்கும் புரியக்கூடியதாக்கப் பட்டுவிட்ட பல விஷயங்கள் பழங்காலத்தில், இருட்டறையிலே இருந்தன!

முதலிலே, இயற்கைச் சக்திகளைக் கண்டு அஞ்சவும், ஆச்சரியப்படவும், பூஜிக்கவும், புகழவுந்தான், மனிதன் பழகினான். பிறகோ, அவனுக்கு, அந்தச் சக்திகளின் இரகசியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அந்த ஆவல், அறிவுத் தாகம்! அப்போது ஒவ்வொரு நாட்டிலும், ஏறத்தாழ ஒரேவிதமான கருத்துள்ள பல கதைகள் முளைத்தன. இந்தக் கற்பனைகளிலே ஒன்றுதான், முதலிலே கூறப்பட்டது. ட்யூடன் மக்கள் பலப்பல காலம் நம்பிய, தேவமா கதை, இங்கு பேசப்படுவது போலவே அங்கும் தேவாசுரப் போர், இங்கு கூறப்படுவது போன்ற காமதேனு, அங்கு சிறிது மாற்றத்துடன், இப்படிப் பல கதைகள் உலவின. இங்கு இன்று பழமையில் புதுமை தூவி மகிழும் பண்பினர் கூறுவர், “நமது மூதாதையர் மூடரல்ல! தேவர்—அசுரர் என்று இருவகையினரை அவர்கள் கற்பித்தனர் என்றால், அழகிய கருத்தின்மீதுதான்—அஃது என்னையோ எனில், இருளில் கெட்டதும், ஒளியில் நல்லதும், இருப்பதுபற்றி எண்ணிய நமது மூதாதையர், இருண்ட மேனியும் கருத்த